Published : 30 Nov 2023 04:10 AM
Last Updated : 30 Nov 2023 04:10 AM
கூடலூர்: தேனியில் நடைபெற்று வரும் மதுரை குடிநீர் திட்டப் பணிகளை வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக கட்டு மானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
மதுரை மாநகராட்சிக்கு தினமும் 125 மில்லியன் கன அடி நீர் பெறும் வகையில் ரூ.1,295.76 கோடி செலவில் ‘அம்ருத்’ திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் ராட்சத குடிநீர்த் தொட்டி கட்டப்பட்டு, அதில் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்கப்படும். அங்கிருந்து பெறப்படும் நீர் திண்டுக்கல் மாவட்டம் பண்ணைப் பட்டியில் சுத்திகரிப்பு செய்து பின்பு மதுரைக்கு கொண்டு செல்லப்படும்.
இதற்காக 25 மீட்டர் நீளம் மற்றும் அகலம், 22 மீட்டர் ஆழத்தில் ராட்சத நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி தொடங்கியது. ஆனால், தொடக்கம் முதலே இத்திட்டத்தில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்தன. ராட்சத தொட்டிக்காக பள்ளம் தோண்டியபோது நீரூற்று பொங்கி வந்ததால், பணிகள் பாதிப்படைந்தன. 4 மின் மோட்டார்கள் மூலம் நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டது.
பின்னர் தொடர் மழையால் இப் பகுதியில் நீர் தேங்கி பணிகள் பாதிக்கப்பட்டன. தொடர்ந்து ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயன்றபோது மணல் மூட்டைகள் அடித்துச் செல்லப்பட்டன. பின்பு ஆற்றின் ஒரு பகுதி நீர் திசைமாற்றப்பட்டு பணிகள் தொடர்ந்தன. கடந்த வாரம் ஆற்றில் திறக்கப்பட்ட அதிகப்படியான தண்ணீர், இத்தொட்டிக்குள் புகுந்தது. தண்ணீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இக்குடிநீர் திட்டப் பணிகள் அனைத்தும் வரும் டிசம்பருக்குள் முடிந்து விடும் என்று எதிர்பார்த்த நிலையில், தொடர்ந்து ஏற்பட்டு வரும் இடையூறு காரணமாக தாமதமாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக திட்டப்பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதனால் திட்டப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தொடர் இடையூறால் பணிகள் தாமதமாகின. தற்போது நீர்உந்து நிலையம் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இத்திட்டத்தை செயல்படுத்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதனால் முனைப்புடன் கட்டு மானப் பணிகள் நடக்கின்றன என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT