Last Updated : 11 Jan, 2018 10:44 AM

 

Published : 11 Jan 2018 10:44 AM
Last Updated : 11 Jan 2018 10:44 AM

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் தகவல்களை காவல் துறையினர் சரிபார்க்க உதவுவதற்காக புதிய ஆப்‘ அறிமுகம்

பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்பவர்களின் தகவல்களைக் காவல் துறையினர் சரிபார்க்க உதவும் வகையில்புதிய `ஆப்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் 21 நாட்கள் வரை ஆகும் காவல் துறையின் சரிபார்ப்பு பணி, இனி 10 நாட்களுக்குள் முடிந்துவிடும் என மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கூறியுள்ளார்.

இந்திய குடிமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கான வழிமுறைகளை எளிமையாக்க, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடந்த 2010-ம் ஆண்டு பாஸ்போர்ட் சேவா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சி யில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எளிமையாகவும், திறம்படவும் பொதுமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாஸ்போர்ட் வழங்கும் சேவையை மேலும் எளிமையாக்கும் நோக்கத்தில் விண்ணப்பதாரரின் தகவல்களைக் காவல்துறையினர் `ஆப்’ மூலம் சரிபார்க்கும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பி.கே.அசோக் பாபு, ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தற்போது பாஸ்போர்ட் பெறு வது மிகவும் எளிமையான விஷயமாக மாறியுள்ளது. தத்கால் முறையில், விண்ணப்பித்த 24 மணி நேரத்துக்குள் பாஸ்போர்ட் கள் வழங்கப்படுகின்றன. அதேபோல், பாஸ்போர்ட் புதுப்பித்தல், காலாவதியான பாஸ்போர்ட்டுக்குப் பதிலாக புதிய பாஸ்போர்ட் வழங்குதல் உள்ளிட்டவையும் தற்போது விரைவாக நடந்து வருகிறது.

எனினும், முதன்முறையாக ஒருவருக்கு பாஸ்போர்ட் வழங்கும்போது மட்டும் சற்று காலதாமதம் ஏற்படுகிறது. விண்ணப்பதாரர்களின் தகவல்களைக் காவல் துறையினர் சரிபார்த்து அறிக்கை அளிக்க ஏற்படும் காலதாமதமே இதற்குக் காரணம். இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், ‘எம் பாஸ்போர்ட் போலீஸ் செயலி’ என்ற புதிய ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப்பை காவல்துறையினர் பதிவிறக்கம் செய்துகொண்டு, சரிபார்ப்பு நடைமுறையை எளிதாக்கலாம். மேலும் இதில் காவல் துறையின் அறிக்கையை பதிவேற்றம் செய்யவும் இயலும். இதற்காக, ரூ.2.91 கோடி செல வில் தமிழக காவல் துறைக்கு 1,700 டேப்லெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய ஆப் மூலம் விண்ணப்பதாரர்களின் தகவல்களை விரைவாக சேகரித்து அனுப்ப முடியும். தற்போது காவல்துறை சரிபார்ப்புக்காக அதிகபட்சமாக 21 நாட்கள் வரை ஆகிறது. புதிய ஆப்பின் உதவியால் இனி 10 நாட்களுக்குள் இப்பணி முடிந்து விடும். 21 நாட்களுக்குள் ஒரு விண்ணப்பதாரரின் தகவல்களை சரிபார்த்துக் கொடுப்பதற்காக எங்கள் அலுவலகம் காவல் துறைக்கு ரூ.150 வழங்குகிறது. அதே சமயம் 21 நாட்கள் தாண்டி விட்டால் ஒரு விண்ணப்பத்துக்கு ரூ.50 மட்டுமே வழங்கப்படும்.

காவலர்களுக்கு இந்த ஆப்பை பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இம்மாத இறுதிக்குள் இந்த ஆப் முழு அளவில் பயன்பாட்டுக்கு வரும். அத்துடன், நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தான் அனைத்து மாவட்டங்களிலும் இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x