Published : 29 Nov 2023 04:33 PM
Last Updated : 29 Nov 2023 04:33 PM
தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஓ.பி. சீட்டு மற்றும் மாத்திரை, மருந்து பெற நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழலுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். இதுதவிர, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களின் சில பகுதிகளில் இருந்தும் இந்த மருத்துவமனைக்கு தினமும் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இவ்வாறு தினமும் பல நூறு பேர் சிகிச்சைக்கு வந்து செல்லும் இந்த மருத்துவமனையில் ஓ.பி. சீட்டு (புற நோயாளிகள்) வாங்கவும், மாத்திரை மருந்து வாங்கவும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் பல்வேறு அவதிக்கு உள்ளாகும் நோயாளிகள் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நோயாளிகள் சிலர் கூறியது: வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமைகளில் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அதிக அளவிலான நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். அதேபோல, மழை மற்றும் பனி காலங்களில் காய்ச்சல், சளி தொடங்கி பல்வேறு உடல்நல பாதிப்புகளும் ஏற்படுவதால் அதிக அளவிலான நோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனர். இந்நிலையில், ஓ.பி. சீட்டு வழங்க 3 வரிசைகள் மட்டுமே உள்ளன. அவற்றில் ஒன்று மூத்த குடிமக்களுக்கான வரிசை. அதேபோல, மாத்திரை மருந்து வாங்கிட 5 வரிசைகள் உள்ளன. அவற்றில் ஒன்று மூத்த குடிமக்களுக்கான வரிசை.
கூட்டம் அதிகம் வரும் நாட்களில் ஓ.பி. சீட்டு பெறும் வரிசையில் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை காத்திருந்தால் தான் சீட்டு வாங்க முடிகிறது. சில நேரங்களில், கணினியில் பணியாற்ற போதிய அனுபவம் இல்லாத பணியாளர்கள் அமர்ந்து விட்டால் இன்னும் தாமதம் ஆகி விடுகிறது. புற நோயாளிகள் பிரிவில் பகல் 12.30 மணி வரை தான் மருத்துவர்கள் இருப்பர். எனவே, தொலைதூர கிராமங்களில் இருந்து வருவோர் நீண்ட நேரம் காத்திருந்து ஓ.பி. சீட்டு வாங்கிக் கொண்டு உரிய அறைக்கு செல்லும்போது அங்கே மருத்துவர் இல்லாத நிலையும் ஏற்படுகிறது.
எனவே, சூழலுக்கு ஏற்ப ஓ.பி. சீட்டு வழங்க ஓரிரு வரிசைகளை அதிகப்படுத்த வேண்டும். மேலும், பணியாளர்களுக்கு விரைந்து சீட்டு வழங்க பயிற்சி அளிக்க வேண்டும். இதுதவிர, மருந்து வழங்கும் வரிசைகளையும் தேவைக்கு ஏற்ப அதிகரித்துக் கொள்ள தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். அதேபோல, மாத்திரை மருந்துகளை உண்ணும் முறை குறித்து அவசர கதியில் விளக்கி நோயாளியின் கைகளில் அவற்றை திணிக்கும் பணியாளர்களுக்கும் போதிய பயிற்சி அளிக்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த வகையில் மருந்துகளை உண்ண, மருந்து வழங்குவோர் அளிக்கும் விளக்கம் தான் பெரும் துணையாக இருக்கும் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இதற்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT