Published : 29 Nov 2023 03:00 PM
Last Updated : 29 Nov 2023 03:00 PM

மறைமலை நகரில் முடங்கி கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்: புத்துயிர் கொடுக்குமா நகராட்சி?

மறைமலை நகர்: கடந்த ஓராண்டாக மறைமலை நகர் நகராட்சியில், 100-க்கும் மேற்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பழுதடைந்து முடங்கி கிடக்கின்றன. இவற்றை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மக்கள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இங்கு, 1.5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க கடந்த, 2013-ம் ஆண்டு கால கட்டத்தில், 21 வார்டுகளிலும் நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.10 கோடியே 50 லட்சம் செலவில், 146 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு வார்டுகளிலும், 5 முதல் 7 வரை இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. இவை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

பொதுமக்களுக்கு இலவசமாக நகராட்சி சார்பில் பாதுகாப்பான, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கில், இந்த சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், நகராட்சி நிர்வாகம் சரியாக பராமரிக்காத காரணத்தால் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. மொத்தம் உள்ள, 146 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் சுமார் 40 மட்டுமே தற்போது சீராக செயல்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியில் பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர்வியாபாரிகளும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விலையை ஏற்றியுள்ளனர். இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை பழுது நீக்கிமீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனஅப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மறைமலை நகர் பகுதியில் பழுதடைந்துள்ள சுத்திகரிப்பு நிலையங்கள்.

106 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இயந்திரங்கள் முறையாக பராமரிக்கப்படாதது உள்ளிட்ட காரணங்களால் அவை பழுதாகி செயல்படாமல் காட்சிப் பொருள்களாக உள்ளதாக புகார் கூறப்படுகிறது. இவை அனைத்தும் கடந்தஆட்சியில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதால் முடக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அரசு பணம் ரூ.10 கோடி வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த விஷயத்தில் அதிகாரிகள் பாகுபாடு பார்க்காமல், பழுதாகிக் கிடக்கும் சுத்திகரிப்பு இயந்திரங்களை சீரமைத்து, மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோபி கண்ணன்

இதுகுறித்து முன்னாள் நகர மன்ற தலைவரும், தற்போதைய கவுன்சிலருமான கோபி கண்ணன் கூறியதாவது: மறைமலை நகர் மக்களின் நலன் கருதி நகராட்சி முழுவதும் பொது மக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கும் நோக்கத்தில் ஆங்காங்கே சுத்திகரிப்பு நிலையம் கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு தற்போதுஉள்ள நிர்வாகம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சரிவர பராமரிக்கவில்லை. இதனால், 100-க்கும் மேற்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பராமரிப்பு இன்றி பயன்பாடற்ற நிலையில் உள்ளன. தற்போது அவை போஸ்டர் ஒட்டும் சுவராக உள்ளன.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடமும், நகர மன்ற கூட்டத்திலும் வலியுறுத்தி இருக்கிறோம். ஆனால், நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் மக்கள் குடிநீர் தேவைக்காக தனியாரிடம் விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை பராமரிக்க தனியாருக்கு முறையாக டெண்டர் விடாததாலும், பராமரிப்பு நிதியைஒப்பந்ததாரருக்கு வழங்காததாலும், அவர்கள்சரிவர குடிநீர் நிலையத்தை பராமரிப்பது இல்லை. இதனை நகராட்சி நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை. மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது. விரைவில் மக்களை திரட்டி போராட்டம் செய்ய முடிவு செய்திருக்கிறோம் என்றார்.

பார்த்தசாரதி

சமூக ஆர்வலர் பார்த்தசாரதி கூறியது: தற்போது சுத்திகரிக்கப்பட்ட ஒரு கேன் (25 லிட்டர்) தண்ணீர் ரூ.30-க்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது வரை சீரமைக்காமல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பூட்டியே உள்ளன. நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 2 ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் மறைமலை நகர் நகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் வழங்கி உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒப்பந்ததாரர்களுக்கு சரிவர பில் தராதது உள்ளிட்ட காரணங்களால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த ஒப்பந்த நிறுவனங்கள் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தேவையான உபகரணங்களை முன்பணம் செலுத்தி கொள்முதல் செய்து பணிகளை முடித்தாலும், நகராட்சியில் பணியாற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள், இதற்கான பில் தயார் செய்வதற்கு காலதாமதம் செய்து வருகின்றனர். குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல், மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்யும் அதிகாரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

நகராட்சி நிர்வாகம் மறுப்பு: அனைவரின் குற்றச்சாட்டையும் மறுத்துள்ள நகராட்சி நிர்வாகம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாகவே மறைமலை நகரில் தண்ணீர் பிரச்சினை இல்லாமல் உள்ளதாகவும் கூறுகிறது. மேலும், சுத்திகரிப்பு நிலையங்களை பராமரிப்பதற்கு தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. அவர்கள் முறையாக பராமரித்து வருகின்றனர். அவ்வப்போது பழுதுஏற்படும் சுத்திகரிப்பு நிலையங்களை ஓரிரு தினங்களில் சீரமைத்து விடுகிறோம். நூற்றுக்கு மேற்பட்ட சுத்திகரிப்பு நிலையங்கள் பழுதடைந்து இருப்பது என்பது உண்மை அல்ல என கருத்து தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x