Published : 29 Nov 2023 10:30 AM
Last Updated : 29 Nov 2023 10:30 AM

“திருச்சி... மாநிலத்தின் தலைநகராகும் காலம் வரும்” - துரைமுருகன் கருத்து

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற திமுக திருச்சி தெற்கு மாவட்ட கருத்துரை கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளரும், மாநில நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன். உடன் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர். படம்: ர.செல்வமுத்துகுமார்

திருச்சி: தமிழகத்தின் மத்தியில் அமைந்துள்ள திருச்சி, மாநிலத்தின் தலைநகர் ஆகும் காலம் வரும் என திமுக பொதுச் செயலாளரும், மாநில நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக திருச்சி தெற்கு மாவட்ட அணிகளுக்கான கருத்துரை கூட்டம், திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்து பேசும்போது, ‘‘2016-ம் ஆண்டு நான் தேர்தலில் போட்டியிட விரும்பி திருவெறும்பூர் தொகுதியை கேட்டபோது, அந்த தொகுதியை கூட்டணிக் கட்சியை சேர்ந்தவர்களும் கேட்டார்கள்.

அந்த நேரத்தில் தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த தொகுதியை எனது மகனுக்காக கேட்கிறேன் எனக் கூறி திருவெறும்பூர் தொகுதியை எனக்கு பெற்றுத் தந்தார். இதை தொகுதி பங்கீட்டுக் குழுவில் அங்கம் வகித்த துரைமுருகன் என்னிடம் கூறியதைக் கேட்டதும், எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நாம் இன்னும் அதிகமாக கட்சிப் பணியாற்ற வேண்டும்’’ என்றார்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திமுக பொதுச்செயலாளரும், மாநில நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் பேசியது: எதையும் சாதிக்கும் திறமை அமைச்சர் அன்பில் மகேஸுக்கு இருக்கிறது. ஆனால், எதுவும் தெரியாதது போல நடிக்கும் திறமையும் அவரிடம் உள்ளது. பிறரை உரசி பார்க்கும் குணம் மகேஸுக்கு இல்லை. ஒதுங்கி போகிற குணம் அவரிடம் உள்ளது. அரசியலுக்கு இந்த குணம் அவசியம். இப்படிப்பட்டவர்கள் இந்த இயக்கத்தை வழிநடத்தப்போவதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். திமுக வரலாற்றில் திருச்சிக்கு முக்கியமான இடம் உண்டு. தமிழகத்தின் மத்தியில் அமைந்துள்ள திருச்சி, மாநிலத்தின் தலைநகர் ஆகும் காலம் வரும். இந்த இயக்கத்தை பல்வேறு சோதனைகளையும் தாண்டி வாழையடி வாழையாக கட்டிக்காப்பவர்கள் உயிர்நாடியான தொண்டர்கள். கட்சி மீது தொண்டர்கள் காட்டிவரும் ஈடுபாட்டுக்கு காரணம் கொள்கை பிடிப்பு. கொள்கை பிடிப்புள்ள திமுகவின் ஒவ்வொரு தொண்டரும் கட்சியின் காவல் தெய்வங்கள்.

திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களிடம் அளவில்லா பாசம் காட்டக் கூடியவர். அவர் சிறந்த தலைவர் மட்டுமல்ல. மிகச் சிறந்த தொண்டரும் கூட. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கரூர் புறவழிச்சாலை குடமுருட்டி பகுதியில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை துரைமுருகன் ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார். இந்நிகழ்வுகளில் திருச்சி கிழக்கு மாநகரச் செயலாளர் மு.மதிவாணன், சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x