Published : 28 Nov 2023 06:01 PM
Last Updated : 28 Nov 2023 06:01 PM
மதுரை: கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தந்தை நடத்திய கல்குவாரியில் சட்ட விரோதமாக ரூ.15.55 கோடிக்கு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது தொடர்பாக வட்டாட்சியர் அளித்த அறிக்கை அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தந்தை எம்.ராமசாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'கரூர் மாவட்டம் புகளூர் தாலுகா அத்திபாளையத்தில் 2011- 2021 வரை பத்தாண்டுகள் பட்டா நிலத்தில் கல் குவாரி நடத்த உரிமம் பெற்றிருந்தேன். குவாரி உரிமம் காலாவதியாக ஒரு மாதம் இருந்த நிலையில் நிலத்தை கண்ணப்பன் என்பவருக்கு விற்றேன். பின்னர் குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி மனு அளித்தேன். குவாரியில் எந்த விதிமீறலும் இல்லை என புகளூர் வட்டாட்சியர் அளித்த அறிக்கை அடிப்படையில் குவாரி உரிமத்தை ரத்து செய்து கரூர் ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், ‘நான் நடத்திய குவாரியில் சட்ட விரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக கூறி எனக்கு ரூ.15.55 கோடி அபராதம் விதித்து கரூர் கோட்டாட்சியர் 12.7.2023-ல் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு பிறப்பிக்கும் முன்பு எனக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவில்லை. இதனால் அபராதம் விதித்து கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதிடுகையில், ''மனுதாரர் முன்னாள் அமைச்சரின் தந்தை என்பதால் அரசியல் காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் குவாரி நிலத்தை விற்ற நிலையில், அதை வாங்கியவர் சட்டவிரோத குவாரி நடத்தி வந்தார். இது தொடர்பாக மனுதாரர் ஆட்சியரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது'' என்றார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் வாதிடுகையில், 'மனுதாரர் நடத்திய குவாரியில் புகளூர் வட்டாட்சியர் ஆய்வு நடத்தி பெரியளவில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக அறிக்கை அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது' என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ''இயற்கை தாய் மனித சமூகத்துக்கு கொடுத்த மிகப்பெரிய கொடை கனிமங்கள். பருவமழைக்கு பெரியளவில் உதவி செய்யும் பாறைகளில் வெடி வைத்து கற்கள் எடுக்கப்படுகின்றன. தாது மணல் போதுமான அளவு சுரண்டப்பட்டுள்ளது. இப்போது எம்-சாண்ட் உற்பத்திக்காக மலைகளை சுரண்டுகிறார்கள். முன்னாள் அமைச்சரான மனுதாரரின் மகனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடைபெறாமல் இருந்தால் மனுதாரரின் குவாரியில் நடைபெற்ற குவாரி முறைகேடு வெளிச்சத்துக்கு வந்திருக்காது. லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு பிறகு மனுதாரரை பாதுகாக்கும் நோக்கத்திலும், நீதிமன்றத்தில் நிவாரணம் பெறுவதற்கு வசதியாக அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மனுதாரரின் ஒரு குவாரியில் மட்டும் ரூ.15.55 கோடி அளவில் முறைகேடு நடந்திருந்தால், தமிழகம் முழுவதும் 1700 கல் குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளில் எந்தளவு முறைகேடு நடந்திருக்கும். குவாரி உரிமம், ஒழுங்குபடுத்துதல், கண்காணித்தல் ஆகிய பணிகளுக்காக தனித்துறை உருவாக்க வேண்டும். குவாரி திட்டம் இல்லாமல், சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் குவாரி நடைபெறக்கூடாது. இதற்காக சட்டம் மற்றும் விதிகளில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டு வர வேண்டும். குவாரிகளை 6 மாதத்துக்கு ஒருமுறை ட்ரோன் தொழில்நுட்ப உதவியுடன் அளவீடு செய்வதற்காக ரூ.25 கோடிக்கு தமிழக கனிமவளத் துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இடையே 21.4.2022-ல் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இது தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் நில அளவைத்துறையில் டோட்டா சர்வே நிலைய தொழில்நுட்பம் அமலில் உள்ளது. இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குவாரிகள் அடிக்கடி அளவீடு செய்யப்பட்டால் பெரியளவில் முறைகேடுகளை தடுக்கலாம். தமிழக அரசு குவாரிகளை கண்காணிக்க மாநிலம், மாவட்டம், தாலுகா அளவில் சிறப்பு படை (டாஸ்க் ஸ்போர்ஸ்) அமைத்துள்ளது. இப்படைகள் இயங்குகிறதா? என்பது தெரியவில்லை. அரசு உத்தரவுப்படி சிறப்பு படை அமைக்கப்பட்டிருந்தால் இந்த வழக்கில் நடைபெற்றிருப்பது போன்ற முறைகேடு தடுக்கப்பட்டிருக்கும். இந்த வழக்கில் அபராத உத்தரவு பிறப்பிக்கும் முன்பு மனுதாரருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவில்லை.
இது இயற்கை நீதிக்கு எதிரானது. இதனால் அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு குவாரி உரிமம் வழங்கப்பட்ட இடத்தில் மாவட்ட ஆட்சியர் நில அளவைத்துறை, கனிம வளத்துறை உதவியுடன் ட்ரோன் தொழில்நுட்ப உதவியுடன் சட்டவிரோதமாக எவ்வளவு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்பதை அளவீடு செய்ய வேண்டும். பின்னர் நடவடிக்கை தேவை என்றால், அதற்காக நேர்மையான கோட்டாட்சியர் ஒருவரை நியமிக்க வேண்டும். அவர் மனுதாரர், நிலத்தை வாங்கிய கண்ணப்பன் ஆகியோருக்கு நோட்டீஸ் அளித்து விசாரணை நடத்தி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மனுதாரர் குவாரி முறைகேடு தொடர்பாக புகளூர் வட்டாட்சியர் 24.12.2021-ல் அளித்த அறிக்கை அடிப்படையில் மாவட்ட ஆட்சியர், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரருக்கு வாய்ப்பு வழங்காமல் அபராதம் விதித்து கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பிக்க என்ன காரணம் என்பதையும் மாவட்ட ஆட்சியரும், கோட்டாட்சியரும் விசாரிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளில் 6 மாதத்துக்கு ஒரு முறை ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அளவீடு செய்து உரிய அதிகாரிகள் சான்று வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
அதிகாரிகள் தெரிந்தோ, தெரியாமலோ சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்காமல், விசாரணை நடத்தாமல் உத்தரவுகளை பிறப்பிக்கின்றனர். இந்த காரணத்துக்காக மட்டுமே 50 சதவீத ரிட் மனுக்கள் தாக்கலாகின்றன. இந்த மனுக்களில் தங்களுக்கு சாதகமாக இடைக்கால உத்தரவு பெற்று செல்கின்றனர். இதனால் உத்தரவுகள் பிறப்பிக்கும் போது இயற்கை நீதியின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இந்த வழக்கு முடிக்கப்படுகிறது.'' இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT