Published : 28 Nov 2023 04:46 PM
Last Updated : 28 Nov 2023 04:46 PM

முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான விசாரணையை 6 மாதங்களில் முடிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

அமைச்சர் காமராஜ் | கோப்புப்படம்

சென்னை: முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகரை ஆறு மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், ‘முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் உணவுத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் காமராஜ். இவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பருப்பு எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாக நான் அளித்த புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார்.

இதேபோல், கடந்த 2015 முதல் 2021-ம் ஆண்டு வரை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள் கொள்முதல் செய்ததில் ரூ.2,028 கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கம் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, "ஆறு மாதங்களில் இந்த வழக்கின் விசாரணை முடிக்கப்படும். மேலும் நீதிமன்றம் தீர்மானிக்கும் தேதியில் இரு புகார்தாரர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும்" என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அரசுத் தரப்பு உத்தரவாதத்தை ஏற்று, ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவிட்டு வழக்குகளை முடித்து வைத்தார். மேலும், புகார்தாரர்கள் இருவரையும் டிசம்பர் 6-ம் தேதி புலன் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x