Published : 28 Nov 2023 03:36 PM
Last Updated : 28 Nov 2023 03:36 PM
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த முடியாததால், பயிர்களைக் காப்பாற்ற நிலங்களைச் சுற்றி மின்வேலிகளை விவசாயிகள் அமைத்து வருகின்றனர். மானாவாரி சாகுபடியில் மக்காச்சோளம் சாகுபடி சுலபமானது என்பதால், விவசாயிகள் அதனை விரும்பி பயிரிடுகின்றனர். இதற்கான மகசூல் காலம் 5 மாதங்களாகும். நல்ல கரிசல் பாங்கான நிலத்தில் மக்காச்சோளம் ஏக்கருக்கு சுமார் 35 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கிறது.
மக்காச்சோளப் பயிரில் படைப்புழுக்கள் தாக்குதல் ஒருபுறமிருந்தாலும், மறுபுறம் கடந்த 4 ஆண்டுகளாக காட்டுப்பன்றிகள் மற்றும் மான்கள் பயிரைத் தின்று அழித்து விடுகின்றன. விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். இரவு நேரங்களில் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் கடுமையான சேதத்தை விளைவிக்கின்றன. பன்றிகளைக் கட்டுப்படுத்த அரசிடம் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு தொடர்ந்து இந்த விஷயத்தில் மவுனம் கடைபிடிப்பதால் விவசாயிகள் சிலர் தங்களது நிலங்களைச் சுற்றி மின்வேலி அமைத்து பயிர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கைவிரித்த வனத்துறை: இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறியதாவது: விவசாயிகளின் நிலங்களைப் பார்வையிட்ட வனத்துறையினர், ‘நிலத்தை சேதப்படுத்துவது காட்டுப்பன்றிகள் இல்லை. அவை வளர்ப்பு பன்றிகள். அதனால் எங்களால் எதுவும் செய்ய முடியாது’ என கைவிரித்துவிட்டனர். வேளாண்மைத் துறையினரும், ‘எங்களால் எதுவும் செய்ய முடியாது’ என கூறிவிட்டனர். உள்ளாட்சி நிர்வாகமோ ‘எங்களுக்கு அதிகாரமில்லை’ என தெரிவித்துவிட்டது. பன்றிகளை வேட்டையாட கோடை காலத்தில் ஏக்கருக்கு ரூ. 1,000 வீதம் வசூல் செய்து பன்றிகளை வேட்டையாடினர்.
இது முழுமையாக கைகொடுக்கவில்லை. தற்போது புரட்டாசி ராபி பருவம் தொடங்கி மக்காச்சோளம் பயிரிட்டு 50 நாட்களை நெருங்கி உள்ள நிலையில், காட்டுப்பன்றிகள் மீண்டும் பயிர்களை சூறையாடி வருகின்றன. எத்தனை முறை கோரிக்கை விடுத்தும், பன்றிகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காததால், தோட்டப்பாசன விவசாயிகள் தங்களது நிலங்களை சுற்றி மின் வேலிகளை அமைத்துள்ளனர். இதற்கு முறையாக அனுமதியும் பெறவில்லை. இது சட்டவிரோதம் என தெரிந்திருந்தும் வேறு வழியின்றி மின்வேலிகளை அமைத்துள்ளனர். இரவு நேரங்களில் மின் வேலிகளில் பன்றிகள் உரசி மடிந்துவிடுகின்றன. இறந்த பன்றிகள் நாள் கணக்கில் அங்கேயே கிடப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
மான்களும் சிக்குகின்றன: மேலும், மின்வேலிகளில் சில நேரங்களில் மான்களும் சிக்கிவிடுகின்றன. மான்களைக் கொன்றால் வனச்சட்டம் பாயும் என்று தெரிந்த விவசாயிகள் வேறுவழியின்றி யாருக்கும் தெரியாமல் உடனுக்கு உடன் தோண்டி புதைத்து விடுகின்றனர். பன்றிகளை கட்டுப்படுத்த தெரியாத அரசால், பாதுகாக்கப்பட வேண்டிய விலங்கினமான மான்களும் அமைதியாக கொல்லப்படுகிறது. இதற்கு அரசே முழுப்பொறுப்பு. காட்டுப்பன்றிகள் ஒழிப்பதில் அரசு முனைப்பு காட்ட வேண்டும். அவற்றை வேட்டையாட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT