Published : 28 Nov 2023 01:56 PM
Last Updated : 28 Nov 2023 01:56 PM
சென்னை: அதிமுக ஆட்சியில் சுடுகாட்டு கூரை அமைத்ததில் ஊழல் செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1991-1996-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் செல்வகணபதி. இவர் தமிழகம் முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் 23 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக 1997-ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில், இந்த வழக்கை 2014 ஆம் ஆண்டு விசாரித்த சென்னை சிபிஐ. சிறப்பு நீதிமன்றம், செல்வகணபதி, ஐஏஎஸ் அதிகாரிகள் ஆச்சார்யலு, சத்தியமூர்த்தி உள்பட 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதேவேளையில் கூட்டு சதி குற்றச்சாட்டில் இருந்து அவர்களை விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.
கூட்டு சதி குற்றச்சாட்டில் இருந்து செல்வகணபதி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதே சமயத்தில் சிறை தண்டனையை எதிர்த்து செல்வகணபதி ஆகியோர் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2014 ஆம் ஆண்டு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு இன்று (நவ.28) நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்தும், வழக்கில் இருந்து செல்வகணபதி உள்ளிட்டோரை விடுதலை செய்தும் உத்தரவிட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த 2 ஆண்டுகள் சிறைத் தண்டனைவால் செல்வகணபதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT