Published : 12 Jan 2018 05:03 PM
Last Updated : 12 Jan 2018 05:03 PM

ஹார்வார்டு தமிழ் இருக்கை குறித்த தவறான பரப்புரைகளை நம்பவேண்டாம்: மருத்துவர் விஜய் ஜானகி ராமன் பேட்டி

இன்னும் 4.5 கோடி மட்டுமே தேவை என்ற நிலையில் விரைவில் அமையவிருக்கிறது ஹார்வர்டு தமிழ் இருக்கை. அதைக்குறித்து ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்றை நான் கூறியதாகச் சொல்லி தவறான கருத்தை பதிவிட்ட சிவா அய்யாத்துரையின் கருத்து அவதூறானது. இதுபோன்ற விண் பரப்புரைகளை நம்பவேண்டாம் என ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பின் இயக்குநர்களில் ஒருவரான டாக்டர் விஜய் ஜானகிராமன் ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

உலகப்புகழ்பெற்றதும் 380 ஆண்டுகள் பழமையானதுமான ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில், 2700 ஆண்டுகள் இலக்கிய, இலக்கண வரலாறு கொண்ட தமிழ்மொழிக்கு இருக்கை அமையவிருக்கின்றது. இதற்கான முன் முயற்சியை தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்களும் அமெரிக்காவில் பிரபல சிறப்பு மருத்துவர்களாகத் தொழில் செய்துவருபவர்களுமான டாக்டர் விஜய் ஜானகிராமன், டாக்டர் சுந்தரேசன் சம்பந்தம் ஆகியோர் தலா அரை மில்லியன் டாலர்கள் நன்கொடை அளித்து பல்கலைக்கழகத்திடம் முறையாக அனுமதி பெற்றனர்.

தமிழ் இருக்கைக் குழு

ஹார்வர்டு பல்கலைக் கழகம் தேர்வு செய்யும் தமிழ்ப் பேராசிரியர் ஒருவரின் தலைமையின் கீழ், செயல்படத் தொடங்கும் தமிழ் இருக்கைக்கு இந்தியப் பணத்துக்கு 40 கோடி ரூபாயை ஆதார நிதியாகச் செலுத்தவேண்டும். இதையடுத்து எஞ்சிய நிதியைத் திரட்டும் முயற்சியில் தொடக்க நன்கொடையாளர்கள் எடுத்தனர். ஹார்வர்டில் அமையவிருக்கும் தமிழ் இருக்கையானது, தனிப்பட்ட மனிதர்களால் உருவாக்கப்பட்டதாக இல்லாமல் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் நன்கொடையாலும் தமிழக அரசின் நிதிப்பங்களிப்பிலும் தொடங்கப்படும் ‘சமுதாய இருக்கை’யாகத்(community chair) துவங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ‘ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பு(Harvard Tamil Chair Inc) என்ற அறக்கட்டளையைத் தொடங்கினர்.

இந்த அமைப்பின் இயக்குநர் குழுவில் டாக்டர்கள் விஜய் ஜானகிராமன், சுந்தரேசன் சம்பந்தம் ஆகியோருடன் பேராசிரியர் வைதேகி ஹெர்பர்ட், பால் பாண்டியன், எழுத்தாளர் அப்பாத்துரை முத்துலிங்கம், குமார் குமரப்பன், முனைவர் ஆறுமுகம் முருகைய்யா, முனைவர் வ.இரகுராமன், சிவன் இளங்கோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தவிர உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைய நன்கொடை அளிக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கு வழிகாட்ட அதிகாரபூர்வ ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

குவிந்துவரும் நன்கொடை

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நன்கொடை பெற www.harvardtamilchair.org என்ற இணையதளம் தொடங்கப்பட்டது. அதன்மூலம் தமிழகம் உட்பட உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் டாலர்களில் நன்கொடை அளித்து வருகின்றனர்.

இந்த உயரிய நோக்கத்துக்கு தமிழக அரசும் தனது பங்காக ரூ.10 கோடியை தமிழ் இருக்கைக்கு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இருக்கை அமைய மொத்தம் தேவைப்படும் ரூ.40 கோடியில் 35.5 கோடி ரூபாய் திரட்டப்பட்டு இன்னும் 4.5 கோடி ரூபாய் மட்டுமே தேவை என்ற இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளது. இந்த நேரத்தில் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வசித்துவரும் தமிழரான சிவா அய்யாத்துரை, ‘ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கான முயற்சிகள் தேவையற்றவை’ என டாக்டர் விஜய் ஜானகிராமனிடம் தெரிவித்தேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டார்’ எனத் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இது சர்ச்சையை உருவாக்கியது.

இதையடுத்து மருத்துவர் விஜய் ஜானகி ராமனைத் தொடர்புகொண்டபோது “அது அவதூறான பதிவு. ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சி இறுதிக்கட்டத்தை அடைந்து தமிழர்கள் அனைவரும் பெருமிதமான தருணத்தில் இருக்கும்போது சிவா. அய்யாத்துரை தவறான தகவலைப் பரப்பியிருக்கிறார். இதுபோன்ற தவறான பரப்புரைகளை நம்பவேண்டாம் என உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களையும் தமிழ் ஆர்வலர்களையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

நடந்தது இதுதான்...

இதுபற்றி அவர் விரிவாகக் கூறும்போது, “சிவா அய்யாத்துரை என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு ‘நீங்கள் தமிழ் இருக்கைக்குச் செலவழிப்பது வீண்’ என்று கூறினார். தொலைபேசி இணைப்பில் ஒருவர் வந்தபிறகு அவர்க் கூறுவதை முழுமையாகக் காதுகொடுத்துக் கேட்கவேண்டும் என்ற தமிழர் பண்பின்படி நான் குறுக்கே பேசாமல் அவர் பேசிமுடிக்கும்வரை அமைதிகாத்தேன். பின்னர் இது உங்கள் தனிப்பட்டக் கருத்து, அடைப்படை அற்றது என அவருக்குக் கூறினேன். இதனை வேறுவிதமாக வெளிப்படுத்திவிட்டார். ஹார்வர்டு தமிழ் இருக்கை எனக்கோ மருத்துவர் திருஞான சம்பந்தத்துக்கோ சொந்தமானது கிடையாது. அது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்குச் சொந்தமானது. இதற்காக நன்கொடை அளித்தவர்கள், அளித்துக்கொண்டிருக்கும் தமிழர்கள், உலகம் முழுவதும் இருக்கிறார்கள். தமிழை உலக அரங்குக்கு எடுத்துச்செல்ல இது சிறந்த காரியம் என்று உளமார நானே உணர்ந்திருக்கிறேன். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நன்கொடை மூலம் தொடங்கவிருக்கும் தமிழ் இருக்கை குறித்து யாரும் தனிப்பட்ட எந்த முடிவையும் எடுக்க முடியாது. இது தெரிந்த பின்பும், இப்படிப்பட்ட தவறான பதிவினை அவர் வெளியிட்டது வருந்தத்தக்கது. இதுபோன்ற தவறான பரப்புரைகளுக்குத் தமிழ்ச் சமூகம் இடமளிக்க வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும் நியூஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் சிவா.அய்யாத்துரையின் தந்தையுமான வெள்ளையப்ப அய்யாத்துரை ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு 3 ஆயிரம் அமெரிக்க டாலர்களை ஏற்கெனவே நன்கொடையாக அளித்திருக்கிறார் என்றும் குறிப்பிடுகிறார் டாக்டர் விஜய் ஜானகிராமன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x