Published : 28 Nov 2023 05:13 AM
Last Updated : 28 Nov 2023 05:13 AM
சென்னை: சமூகநீதி தழைக்க வேண்டுமானால், தாமதப்படுத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த வேண்டும் என்று வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பின்னர், சிலை திறப்பு விழா பேருரை நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசுப் பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம் என்ற பி.பி.மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்திய சமூகநீதி காவலர் வி.பி.சிங். பிறப்பால் பிற்படுத்தப்பட்டவர் அல்ல என்றாலும், ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இடஒதுக்கீட்டை சாத்தியப்படுத்திக் காட்டினார். அவரது முயற்சியால்தான் பிற்படுத்தப்பட்டோர் ஒரு அடியாவது முன்னேறியுள்ளனர். நாம் இன்னும் பல உயரங்களுக்கு செல்ல வேண்டும். நமக்கான உரிமைகள் இன்றும்கூட முழுமையாக கிடைக்காத சூழல் உள்ளது. கல்வி நிறுவனங்களில் ஓபிசி இடஒதுக்கீடு 2006-க்கு பிறகுதான் நடைமுறைக்கு வந்தது.
பல்கலைக்கழக மானியக் குழு இணை இயக்குநர் பதவிக்கு இடஒதுக்கீடே இல்லை. மத்திய அரசின் துறை செயலர்கள் 89 பேரில் 85 பேர் முற்பட்ட வகுப்பினர். பட்டியலின பிரிவில் ஒருவர், 3 பழங்குடியினர் உள்ளனர். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் ஒருவர்கூட இல்லை. மத்திய அரசின் கூடுதல் செயலர்கள் 93 பேரில் 82 பேர் முற்பட்ட வகுப்பினர். அதிலும் பிற்படுத்தப்பட்டவர்கள் இல்லை. இணை செயலர்கள் 275 பேரில் 19 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள்.
மத்திய சட்டப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடே இல்லாத நிலை உள்ளது. 45 மத்திய பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்ட பேராசிரியர்கள் எண்ணிக்கை 4 சதவீதம் மட்டுமே. பல்வேறு துறைகளில் நிலைமை இப்படித்தான் உள்ளது.
திமுக சோர்ந்து போகாது: நாடு முழுவதும் உயர் நீதிமன்றங்களில் 2018 முதல் 2023 வரை நியமிக்கப்பட்ட 604 நீதிபதிகளில், 72 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள். ஆனால், 458 பேர் பொதுப் பிரிவை சேர்ந்தவர்கள். நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை. அரசுத் துறை பதவி உயர்வுகளிலும் இடஒதுக்கீடு அமலாகவில்லை. இந்த நிலையை மாற்ற நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும். அந்த பணியில் இருந்து திமுக ஒருபோதும் சோர்ந்து போகாது. சமூகநீதி பயணத்தில் நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்.
சமூகநீதி என்பது ஒரு மாநிலத்தின் பிரச்சினை அல்ல. எல்லா மாநிலங்களின் பிரச்சினை. சமூகநீதி தழைக்க வேண்டுமானால், தாமதப்படுத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியின மக்கள், சிறுபான்மையினர் என அனைவருக்கும் முறையாக இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதையெல்லாம் தேசிய அளவில் கண்காணித்து, உறுதிசெய்ய அனைத்து கட்சி எம்.பி.க்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
அனைத்தும் தனியார்மயம்: உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசும்போது, “வி.பி.சிங்கை கவுரவப்படுத்தியுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். யாருமே கண்டுகொள்ளாத மண்டல் ஆணைய பரிந்துரையை அமல்படுத்தியவர் வி.பி.சிங். மண்டல் ஆணையத்தின் பரிந்துரை அமல்படுத்தப்பட்டபோது, போராட்டங்கள், பேருந்து எரிப்பு சம்பவங்கள் நடந்ததாக கேள்விப்பட்டு இருக்கிறேன். தனக்கு எதிர்காலம் இல்லை என்று டெல்லியில் ஓர் இளைஞர் தீக்குளித்த சம்பவமும் நடந்தது. ஆனால், தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டபோது, யாரும் உயிரை தியாகம் செய்யவில்லை. இதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பை தனியார் மயமாக்க டெல்லி அரசு முடிவெடுத்துள்ளது. அனைத்தும் தனியார்மயமானால், நமது போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்” என்றார்.
முன்னதாக, அனைவரையும் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் வி.பி.சிங்கின் மனைவி சீதா குமாரி, மருமகள் ஸ்ருதி குமாரி, பேத்திகள் ரிச்சா மஞ்சரி சிங், அட்ரிதா மஞ்சரி சிங், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவரது மகன் துரை வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT