Published : 28 Nov 2023 05:00 AM
Last Updated : 28 Nov 2023 05:00 AM
சென்னை: சட்டப்பேரவையில் அறிவித்தபடி, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் முழுஉருவ சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். உத்தர பிரதேசமுன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்,வி.பி.சிங்கின் மனைவி சீதா குமாரி,மகன் அஜயா சிங் உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர்.
உத்தர பிரதேச முதல்வராகவும், மத்திய நிதி, வர்த்தகம், பாதுகாப்பு, வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் வி.பி.சிங். தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி கடந்த 1989-ம் ஆண்டு நாட்டின் பிரதமரானார். 11 மாத அவரது ஆட்சியில் பல்வேறு சாதனைகள் புரிந்தார்.
சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மண்டல் ஆணைய பரிந்துரைப்படி, மத்திய அரசுப் பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் உத்தரவை அமல்படுத்தினார். காவிரி நீருக்காக நடுவர்மன்ற ஆணையத்தை அமைத்து தந்தார். சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராசர் பெயரையும், பன்னாட்டு விமானநிலையத்துக்கு அண்ணா பெயரையும் சூட்டினார்.
‘‘சமூகநீதி காவலர் வி.பி.சிங்குக்குமரியாதை செலுத்தும் விதமாக சென்னையில் அவரது முழுஉருவசிலை அமைக்கப்படும்’’ என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த ஏப்.20-ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் அறிவித்தார். அதன்படி, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.52.20 லட்சம் செலவில் வி.பி.சிங் முழுஉருவ சிலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், வி.பி.சிங் நினைவுதினமான நேற்று, சென்னை மாநிலக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங்கின் மனைவி சீதா குமாரி, மகன் அஜயா சிங், மருமகள் ஸ்ருதி குமாரி, பேத்திகள் ரிச்சா மஞ்சரி சிங், அட்ரிதா மஞ்சரி சிங் பங்கேற்றனர்.
பின்னர், சிலை திறப்பு விழா பேருரைநிகழ்ச்சி, கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின்பேசியபோது, ‘‘நாடு முழுமைக்கும் பரவி இருக்கும் சமூகநீதி குடும்பத்தை சேர்ந்தவர்கள் நாங்கள். வி.பி.சிங்குக்கு சிலை வைப்பதன்மூலம் அவருக்கு காட்ட வேண்டிய நன்றியை தெரிவித்துள்ளோம். வி.பி.சிங் மற்றும்அவரது தியாக வாழ்வு பற்றி நாட்டில்ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளவேண்டும். குறிப்பாக, இளைஞர்களுக்கு அவரது வாழ்வு திரும்பதிரும்ப சொல்லப்பட வேண்டும் என்பதால்தான், மாநிலக் கல்லூரியில் சிலை அமைத்துள்ளோம்’’ என்றார்.
தமிழக அரசுக்கு நன்றி: வி.பி.சிங் மகன் அஜயா சிங் பேசும்போது, “எனது தந்தைக்கு சிலை அமைத்த தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். வி.பி.சிங் தனது அனுபவங்கள் குறித்துஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையை அவர் வாசித்தார்.
நிகழ்ச்சிக்கு பிறகு, செய்தியாளர்களிடம் வி.பி.சிங் பேத்தி ரிச்சா மஞ்சரி சிங் கூறும்போது, ‘‘தேசிய அளவில் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில், தாத்தாவின் சிலை இங்கு திறக்கப்பட்டிருப்பது பெருமையாக உள்ளது. மண்டல் ஆணைய பரிந்துரையை அமல்படுத்தியபோது, பலருக்கும் அவர்வில்லனாக தெரிந்தார். அவர் செய்தது எவ்வளவு சவாலான விஷயம்என்பது இப்போதுதான் தெரிகிறது.அவர் அப்போது மேற்கொண்ட இந்தசிறப்பான முயற்சிதான் தற்போது சமூகத்தில் சரியான அளவு இடஒதுக்கீட்டுக்கு வழிவகுத்துள்ளது’’ என்று பெருமிதத்துடன் கூறினார்.
நிகழ்ச்சியில், துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மு.பெ.சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்ட எம்.பி.க்கள்,தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா,பொதுப்பணி துறை செயலர் பி.சந்திரமோகன், செய்தி துறை செயலர் ஆர்.செல்வராஜ், செய்தி, மக்கள் தொடர்பு துறை இயக்குநர் த.மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT