Published : 28 Nov 2023 08:32 AM
Last Updated : 28 Nov 2023 08:32 AM
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கான பயிற்சிக் களமாக, டிச.17-ல் சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாடு இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் வலுவான ஒரு மாற்று அணி 1988-ம் ஆண்டில் அமைந்த தேசிய முன்னணிதான். அதன் உருவாக்கத்தில் மிக முக்கிய பங்கு வகித்தவர் மு.கருணாநிதி. டெல்லியின் அரசியல் தட்பவெப்ப நிலை அறிந்த முரசொலி மாறனின் பங்களிப்பும் இதில் முக்கியமானது.
அப்போது ஆந்திராவின் முதல்வராக இருந்த என்.டி.ராமராவை கன்வீனராகக் கொண்ட தேசிய முன்னணியின் தொடக்க விழா 1988-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது. கருணாநிதியுடன், முன்னாள் பிரதமர் வி.பி.சிங், என்.டி.ராமராவ் உள்ளிட்ட தலைவர்களும் பார்வையிட்ட தேசிய முன்னணி தொடக்க விழாப் பேரணியில், திமுக இளைஞரணி வீறுநடை போட்டு அணிவகுத்து வந்தபோது மிகப்பெரிய அளவில் எழுச்சி ஆரவாரத்தை காண முடிந்தது.
தேசிய முன்னணிக்கு தேர்தல் களத்தில் முதல் வெற்றியை பெற்று கருணாநிதி தலைமையில் 1989-ல் திமுக 13 ஆண்டுக்குப்பின் ஆட்சியமைத்தது. அதைத்தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வென்று வி.பி.சிங் பிரதமரானார். அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது, என்னிடம் அன்பைப் பொழிந்ததுடன், பேரணியை முன்னின்று நடத்தி வந்த பாங்கையும் பாராட்டினார்.
மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கையான சமூகநீதியை, இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல் கொள்கையாக மாற்றியவர் வி.பி.சிங். இத்தகைய மாமனிதருக்கு இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக அரசின் சார்பில் சிலை நிறுவப்பட்டுள்ளது.
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் சமூகநீதி, மனித உரிமைக்காக தேசிய முன்னணி தொடங்கப்பட்ட போது, திமுக இளைஞரணி எத்தகைய எழுச்சிமிக்க பேரணியை நடத்தியதோ, அதேபோல் மத்திய பாஜக அரசிடமிருந்து நாட்டை காப்பாற்ற கையெழுத்து இயக்கத்தையும், இருசக்கர வாகன பேரணியையும் இளைஞரணி நடத்தியுள்ளது.
டிச.17-ம் தேதி சேலத்தில் மாநில உரிமை மீட்பு முழக்கத்துடன், இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி இன்று தன் பிறந்தநாளில் என்னிடம் வாழ்த்துகளைப் பெற்றுள்ளார். அவரை மட்டுமல்ல; மாநில மாநாட்டை நடத்த பாடுபடும் 25 லட்சம் இளைஞரணியினரையும் வாழ்த்துகிறேன்.
இந்த மாநாடு, நாம் எதிர்கொள்ளவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பயிற்சிக் களம்.
பொய்களை விற்று கூலி பெற்று இளைஞர்களை ஏமாற்றும் கூட்டம் ஒரு புறம். வதந்திகளை பரப்பி வன்முறையை விதைத்து தமிழகத்தில் கால் ஊன்றி விடலாம் எனத் தப்புக் கணக்கு போடும் கூட்டம் மறுபுறம், தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டு தமிழகத்தின் உரிமைகளை அடமானம் வைத்து விட்டுப் போன முதுகெலும்பற்ற கூட்டம் இன்னொரு புறம். இந்த மோசடி அரசியல் சக்திகளை எதிர்கொள்ளும் திமுகவும் அதன் தோழமை சக்திகளும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் முழுமையாக வென்றாக வேண்டும். அப்போதுதான் இந்திய அளவில் நம் இண்டியா கூட்டணி வலுவான ஆட்சியை அமைக்கும். நீட் விலக்கு என்ற இலக்கினை எட்டுவதுடன், மாநில உரிமைகளை மீட்கவும் முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT