Published : 28 Nov 2023 06:12 AM
Last Updated : 28 Nov 2023 06:12 AM
சென்னை: போதைப் பொருள் ஒழிப்பில் மெத்தனம் காட்டியதாக சென்னையில் 68 போலீஸார் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் வகையில் 132 உளவுப் பிரிவு போலீஸாரும் மாற்றப்பட உள்ளனர். கஞ்சா, குட்கா, மாவா உள்ளிட்ட போதை மற்றும் புகையிலைப் பொருட்களின் விற்பனை மற்றும் பதுக்கலை முற்றிலும் தடுக்க அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி, சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய்ரத்தோர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
போதைப் பொருள் விற்பனையில் தொடர்புடையவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இந்த நடவடிக்கையில் சில போலீஸார் மெத்தனம் காட்டியதாகவும், சில போலீஸார் போதைப் பொருள் கடத்தல்கும்பலின் தொடர்பில் இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அவர்களின் விவரங்கள் உளவுப் பிரிவு போலீஸார் உட்பட மேலும் சிலர் மூலம் சேகரிக்கப்பட்டன. இதையடுத்து புகாரில் சிக்கியதாக சென்னையில் 3 காவல்உதவி ஆணையர்கள் உட்பட 68 போலீஸார் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர். சிலர் வெளிமாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இக்குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள் அனைவரும் வட சென்னை காவல் கூடுதல் ஆணையர் எல்லைக்கு உட்பட்டவர்கள். அடுத்த கட்டமாக தென் சென்னையிலும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுஒருபுறம் இருக்க கண்காணிப்பு மற்றும் உளவுப் பணியை மேலும் அதிகரிக்கவும், முறைகேடுகளைத் தடுக்கும் வகையிலும் சென்னையில் 132 உளவுப் பிரிவு (நுண்ணறிவு பிரிவு)போலீஸாரை (லேவல் 2 ஐ.எஸ். உட்பட) பணியிடம் மாற்றம் செய்துஅந்த இடத்துக்கு புதியபோலீஸாரை அமர்த்தும் பணியையும் காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் முடுக்கிவிட்டுள்ளார்.
பெரும்பாலான காவல் நிலையங்களில் எழுத்தரின் (ரைட்டர்)செயல்பாடுகள் எல்லை மீறி உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதையடுத்து அனைத்து காவல்நிலையங்களிலும் உள்ள எழுத்தர்களின் நடவடிக்கைகளை போலீஸ் அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை பாய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் சட்டம் - ஒழுங்கை நல்ல முறையில் பராமரிக்கவும், முறை கேடுகளை முற்றிலும் தடுத்து,பொதுமக்களுக்கு சிறப்பான நிர்வாகத்தை (காவல் பணி) வழங்கவுமே இந்த தொடர்நடவடிக்கைகளைக் காவல் ஆணையர் மேற்கொண்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT