Published : 11 Jan 2018 10:10 AM
Last Updated : 11 Jan 2018 10:10 AM
பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 15, 16-ம் தேதிகளில் நடக்கும் பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஏதாவது ஒரு இடத்தில் போட்டியை தொடங்கி வைக்க முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 16-ம் தேதி நடக்கிறது. கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் கிளர்ந்தெழுந்தன. இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் தனி சட்டத்தை நிறைவேற்றின.
இப்போராட்டம் காரணமாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அலங்காநல்லூரில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. காளைகளை அவிழ்த்துவிடும் வாடிவாசல் அமைக்கும் பணி, காலரிகள், பந்தல் போடும் பணி துரிதமாக நடக்கிறது.
தற்போது, காளைகளுக்கு தகுதிச்சான்று வழங்கும்பணி நிறைவடைந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் தகுதியான காளைகளுக்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ‘டோக்கன்’ வழங்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டுக் காளைகளுக்குப் பயிற்சி, காளைகளை அடக்க இளைஞர்களுக்குப் பயிற்சி என அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன.
இந்நிலையில், அலங்காநல்லூர் அல்லது பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியை தொடங்கி வைக்க முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் உள்ளூர் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் கூறியது: கடந்த 8-ம் தேதி முதல்வர், துணை முதல்வரை அலங்காநல்லூர் விழாக்குழுவினர் சந்தித்தோம். அப்போது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை தொடங்கி வைக்க அழைப்பு விடுத்தோம். அவர்கள் வருவதாக உறுதியளித்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அமைச்சர்கள், மாவட் ஆட்சியர் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு 517 காளைகளை வாடிவாசலில் அவிழ்த்துவிட்டோம். இந்த ஆண்டு 600 காளைகள் வரை வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
முதல்வருக்கு விமான டிக்கெட்
மாவட்ட அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘முதலமைச்சர் பழனிசாமிக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடக்கும் 16-ம் தேதி மதுரையில் இருந்து சென்னை செல்லும் விமானத்தில் நேற்றுமுன்பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 14-ம் தேதி சேலத்தில் பொங்கல் விழாவை கொண்டாடுகிறார். அங்கிருந்து அலங்காநல்லூருக்கு கார் மூலம் வந்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்துவிட்டு மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை செல்லும் பயணத்திட்டம் உள்ளது. அதேநேரம் அலங்காநல்லூர் வராமல் சேலத்தில் இருந்து கோவை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்லும் பயணத்திட்டமும் உள்ளது ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT