Published : 27 Nov 2023 03:19 PM
Last Updated : 27 Nov 2023 03:19 PM

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை: அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

சென்னை: டெங்கு காய்ச்சல் பரவலை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்த, இம்மழைக் காலத்தில் உடனடியாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து காய்ச்சல் முகாம்களை அதிக அளவில் நடத்தி டெங்கு, ஃப்ளு, டைபாய்ட் போன்ற விஷக் காய்ச்சல்களைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாகத் தேவையான மருத்துவ உதவிகளை அளித்திட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதையும், சுமார் இரண்டு மாதங்களில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஒரு சில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதையும் குறிப்பிட்டு, இனியாவது இந்த திமுக அரசும், சுகாதாரத் துறையும் விழித்துக்கொண்டு தமிழகம் முழுவதும் அதிமுகவின் ஆட்சியில் நடத்தியதைப் போன்று காய்ச்சல் முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி, நோய்களைக் கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, 30.7.2023, 29.9.2023 ஆகிய தேதிகளில் வெளியிட்டுள்ள எனது அறிக்கைகள் மற்றும் பேட்டிகளின் வாயிலாக திமுக அரசை வலியுறுத்தி இருந்தேன்.ஆனால், திமுக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் எப்போதும்போல் தனது துறை சரியாக செயல்படுவதாக பேட்டி அளித்துவிட்டு, பெயரளவுக்கு ஓரிரு நாள் மட்டும் காய்ச்சல் முகாம்களை நடத்திவிட்டு, மாரத்தான் போட்டிகளை நடத்துவதற்கு சென்றுவிட்டார்.

நேற்று (நவ.26), மதுரை மாநகராட்சிப் பகுதியில் 1 வயது குழந்தை, 2 சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர்; புறநகர் பகுதிகளில் 5 சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேர் என்று மொத்தம் 13 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும், மதுரை மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிய வருகிறது. இதேபோன்று நேற்று, ஒரே நாளில் மதுரையில் 67 பேர் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்; மாவட்டம் முழுவதும் சாதாரண காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும்; கடந்த 30 நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாதாரண காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேபோல், புதுக்கோட்டையில் ஓரிரு நாளில் புதிதாக 59 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதுவரை காய்ச்சலால் 229 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், ஏற்கெனவே, டெங்கு காய்ச்சலுக்கு சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தமிழகத்தில் நிலவும் அவலங்களை சுட்டிக்காட்டும் போது, அதிலுள்ள உண்மைகளைப் புரிந்துகொண்டு, தமிழக மக்களின் நலன் சம்பந்தமான நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டிய கடமை சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கும், திமுக அரசுக்கும் உண்டு.

ஆனால், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வழங்கி, பின்புற வாசல் வழியாக பதவியேற்ற இந்த திமுக அரசின் முதல்வரும், அமைச்சர்களும், எப்போதும் போல், எனது தலைமையிலான அதிமுக அரசில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தாங்கள் செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரப்படுத்துவதிலேயே உள்ளனர்.

உதாரணமாக, சென்னை மத்திய கைலாஷ் அருகில் உள்ள சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 2019-ம் ஆண்டு எனது தலைமையிலான ஆட்சியில் சுமார் 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 ‘யு’ வடிவ பாலங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு 2 வருடங்களில் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப் பட்டிருந்தது. கரோனா தொற்றால் இப்பணி தாமதமாகியது. ஆனால், இந்த அரசு பதவியேற்று 30 மாதங்கள் கழித்து, சென்ற வாரம்தான் இரு பாலங்களில் ஒன்றை மட்டும் திறந்து வைத்து, தங்கள் ஆட்சியில் செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டுள்ளது. மற்றொன்றை எப்போது கட்டி முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருவார்கள் என்று, அப்பகுதியில் பயணம் செய்யும் மக்கள் ஏக்கத்துடன் காத்துக்கொண்டுள்ளனர். இந்த அரசின் குறைகளை எனது அறிக்கைகள் மூலம் குறிப்பிட்டு வெளியிடுகிறேன். எனவே, நான் அறிக்கைகளில் சுட்டிக்காட்டிய குறைகளை உடனடியாகக் களைய இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

குறிப்பாக, இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள டெங்கு காய்ச்சல் பரவலை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்த, இம்மழைக் காலத்தில் உடனடியாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து காய்ச்சல் முகாம்களை அதிக அளவில் நடத்தி, டெங்கு, ஃப்ளு, டைபாய்ட் போன்ற விஷக் காய்ச்சல்களைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாகத் தேவையான மருத்துவ உதவிகளை அளித்திட வேண்டும் என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x