Published : 27 Nov 2023 01:53 PM
Last Updated : 27 Nov 2023 01:53 PM

“சமூக நீதி காப்பதில் மாநில உரிமைகளை முதல்வர் ஸ்டாலின் காவு கொடுக்கலாமா?” - ராமதாஸ்

ராமதாஸ் | கோப்புப்படம்

சென்னை: "சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு உரிமை இருப்பதாக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறுவது மாநில உரிமைகளை தாரை வார்ப்பது இல்லையா? மாநில உரிமைப் போராளி என்று தம்மை அழைத்துக் கொள்ளும் முதல்வர், சமூக நீதி காக்கும் விஷயத்தில் மாநில உரிமைகளை காவு கொடுக்கலாமா?" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் அரசு நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களிடம் அவர்களின் சாதி, வயது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் திரட்டப்படுவது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இத்தகைய விவரங்கள் திரட்டப்படுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அதன் சமூக நீதித் தேவைகளை வலியுறுத்தியிருக்கிறார் போக்குவரத்து அமைச்சர். அரசின் நிலைப்பாடு மிகவும் சரியானது தான். அரசுப் பேருந்துகளில் சமூக நீதியைக் காக்கும் அணுகுமுறை ஒட்டுமொத்த மாநிலத்திலும் சமூக நீதியை காப்பதில் கடைபிடிக்கப்படாதது ஏன் என்பதுதான் பாமகவின் வினா.

நகரப் பேருந்துகளில் மகளிரை இலவசமாக பயணிக்க அனுமதிக்கும் திட்டம் சமுதாயத்தின் எந்த அடுக்கை சேர்ந்தவர்களுக்கு, எந்த வயதினருக்கு, எத்தகைய வருவாய் உள்ளோருக்கு பயன்படுகிறது என்பதை கண்டறிந்து அதனடிப்படையில் திட்டத்தை இன்னும் கூர்மைப்படுத்துவதுதான் இதன் நோக்கம் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் நோக்கமும் இதுவேதான். கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நீதி, மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளால் யாரெல்லாம் பயனடைகிறார்கள் என்பதைக் கண்டறிந்து சமூக நீதியை வலுப்படுத்துவது தான் சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம். அதை செயல்படுத்த அரசு மறுப்பது ஏன்? அதில் என்ன சிக்கல் உள்ளது?

கொள்கை அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பை ஏற்றுக்கொள்வதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், அதை மத்திய அரசு தான் நடத்த வேண்டும் என்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும், அதில் தெரியவரும் தரவுகளின் அடிப்படையில் சமூக நீதி நடவடிக்கைளை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருப்பதாக பிஹார் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் கூறி விட்ட நிலையில், மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறுவது மாநில உரிமைகளை தாரை வார்ப்பது இல்லையா? மாநில உரிமைப் போராளி என்று தம்மை அழைத்துக்கொள்ளும் முதல்வர், சமூக நீதி காக்கும் விஷயத்தில் மாநில உரிமைகளை காவு கொடுக்கலாமா?

மாநில அரசுகளே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற குரல் இப்போது நாடு முழுவதும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதன் நோக்கத்தையும், தேவையையும் புரிந்து கொண்டு தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசின் வாயிலாகவே நடத்துவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x