Published : 27 Nov 2023 05:12 AM
Last Updated : 27 Nov 2023 05:12 AM
சென்னை: தமிழக காவல் துறையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கான அதிகாரிகள் உள்ளிட்ட போலீஸாரை தேர்வு செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் கார் சிலிண்டர் வெடிப்பு ஏற்பட்டது. இச் சம்பவத்தில், ஜமேஷா முபீன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுதொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நடத்திய விசாரணையில் ஜமேஷா முபீன், தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரது கூட்டாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இச்சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் தீவிரவாதச் செயல்களைத் தடுத்து நிறுத்த காவல் துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு உருவாக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, அப்பிரிவை உருவாக்கும் பணியில் தமிழக காவல் துறை உயா் அதிகாரிகள் ஈடுபட்டனா்.
முதல் கட்டமாக, இந்தியாவில் தீவிரவாத தடுப்புப் பிரிவு செயல்பாட்டில் உள்ள ஆந்திரா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், கேரளா ஆகிய 4 மாநிலங்களுக்கு காவல் துறை உயரதிகாரிகள் சென்று, அந்தப் பிரிவு செயல்படும் விதம், அவா்கள் பயன்படுத்தும் நவீன ஆயுதங்கள், அந்தப் பிரிவில் உள்ள காவலா்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி, தேவையான கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட தகவல்களை சேகரித்தனா்.
வரைவுத் திட்டம்: பின்னர், இந்த சிறப்புப் பிரிவுக்கான ஒரு வரைவுத் திட்டத்தை டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையிலான போலீஸார் தயாரித்து தமிழக அரசுக்கு அனுப்பினர். அந்தத் திட்டத்தில், ஒரு பயிற்சிப் பள்ளியை தொடங்கி, 18 வயதில் இருந்து 22வயதுடைய திறமையான, துணிச்சல்மிக்க இளைஞா்களைக் காவல் துறையில் இருந்து தோ்வுசெய்வது, அவா்களுக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் பிறமாநிலங்களில் செயல்படும் தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மூலம் பயிற்சி அளிப்பது, முதல் கட்டமாக சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய 4 நகரங்களில் தீவிரவாத தடுப்புப் பிரிவைத் தொடங்குவது என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இதன் தொடர்ச்சியாக தமிழககாவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக தீவிரவாத தடுப்புப் பிரிவைத் தொடங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இப்பிரிவானது டிஐஜி தலைமையில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, திறமையான டிஐஜியை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
இத்தேர்வில் டிஐஜி தர்மராஜன் முன்னணியில் உள்ளார்.இதேபோல், இப்பிரிவுக்கான காவல் கண்காணிப்பாளா்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் உட்பட போலீஸாரை தேர்வு செய்யும் பணியை போலீஸ் அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT