Published : 26 Nov 2023 06:30 PM
Last Updated : 26 Nov 2023 06:30 PM
சென்னை: தமிழக அரசியல் களத்தில் தேடும் நிலையில் அதிமுக இருப்பதாக பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் விமர்சித்துள்ளார்.
மதுரை மாநகர் மாவட்ட பாஜக சார்பில், பாஜக அலுவலகத்தில் சக்தி கேந்திரா, பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் மகா. சுசீந்திரன் தலைமை வகித்தார். இதில், மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் பங்கேற்று ஆலோசனை வழங்கி பேசியதாவது: ''தமிழ்நாட்டில் எதிர்கட்சிகள் மிரளும் வகையில் பாஜக அசுர வளர்ச்சியடைந்துள்ளது. திமுக மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். தமிழக அரசியல் களத்தில் அதிமுகவை தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சக்தி கேந்திரா, பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றிக்கு கடுமையாக உழைக்கவேண்டும். மதுரை மாநகர் மாவட்டத்திலுள்ள 960 வாக்கு சாவடிகளிலும் தாமரை சின்னத்துக்கு அதிக வாக்குகளை பெற முயற்சிக்க வேண்டும். இதற்காக பூத் கமிட்டி முகவர்கள் ஒரு மாதத்தில் 5 மணி நேரம் தேர்தல் பணிக்கென உழைக்கவேண்டும். மதுரை நாடாளுமன்றத்தில் பாஜக வெற்றி வாகை சூட கருத்து வேறுபாடுகளை மறந்து எதிர்க்கட்சிகளுக்கு பயப்படாமல் பணி செய்ய வேண்டும்.'' இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், சக்தி கேந்திர பொறுப்பாளர் சுபா நாகராஜ், தேசிய குழு உறுப்பினர் மகாலெட்சுமி, பொதுச் செயலர்கள் ராஜ்குமார், கிருஷ்ணன், பால கிருஷ்ணன், துணைத் தலைவர்கள் வினோத்குமார், ஜோதி மணிவண்ணன், பொருளாளர் நவீன் அரசு, ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT