Published : 26 Nov 2023 05:41 PM
Last Updated : 26 Nov 2023 05:41 PM

''நிதி பற்றாக்குறை உள்ள நிலையில் ரூ.42 கோடியில் ஃபார்முலா கார் பந்தயம் நடத்த வேண்டிய அவசியம் என்ன?'' - ஜெயக்குமார் கேள்வி 

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் | கோப்புப் படம்.

சென்னை: மருந்துகள் தயார் நிலையில் இல்லை; ஆனால் ரூ.42 கோடியில் ஃபார்முலா கார் பந்தயம் நடத்த எங்கிருந்து நிதி வந்தது? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ராயபுரத்தில் நடைபெற்று வரும் முகாம்களை பார்வையிட்டு, அதிமுகவின் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கிய பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் முகாம்கள் மூலம், இறந்தவர் பெயர்கள், குடிபெயர்ந்தவர்களின் பெயர்கள் ஆகியவை முறையாக நீக்கப்பட்டு உண்மையான வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.

தமிழக நிதிநிலைமை மோசமாக இருப்பதாக கூறி பல்வேறு நிதி சார்ந்த பணிகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக அரசு, 42 கோடி மதிப்பீட்டில் சென்னையில் ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் எப்4 என்ற கால்பந்தயத்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன?

தமிழகத்தில் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதன் மூலம், மாவட்ட ஆட்சியர்களும், அதிகாரிகளும் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்றால் இது போன்ற அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். திமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட குடியாத்தம் குமரன் வெளியிட்ட காணொலியை வைத்து அமலாக்கத்துறை உரிய விசாரணையை நடத்த வேண்டும்.

40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என தமிழக முதல்வர் பேசியிருப்பது ஒரு கானல் நீர் போன்றது, மக்கள் மீது கடுமையான அதிருப்தியை சம்பாதித்து இருக்கும் திமுக, இதுபோன்று பகல் கனவுகளை காண வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. ஒரு கையெழுத்து மூலம் நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, 50 லட்சம் கையெழுத்துகளைக் கேட்டு வீதிவீதியாக பிரச்சாரம் செய்து கையொப்பங்களை பெற்று வருகிறது. ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து மீனவர்கள் தாக்கப்படுவதும் உடைமைகள் சேதப்படுத்துவதும் தொடர்கதையாக இருக்கிறது.

நடிகர் சங்கம் தோற்றுவிக்க காரணமாக இருந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நினைவு நாளில், நடிகர் சங்க நிகழ்ச்சியை நடத்துவது ஆட்சியாளர்களின் நிர்பந்தமே காரணம். 2024 ஆம் ஆண்டு அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அனைவரிடத்திலும் ஏற்பட்டுள்ளது: மற்ற கட்சிகளில் இருந்து அதிமுகவினை நோக்கி பலர் படையெடுத்து வருகின்றனர்.

விவசாயி அருண் மீது குண்டர் சட்டத்தின் வழக்கு பாய்ந்திருப்பது குறித்து இதுவரை எந்த ஊடகமும் வாய் திறக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. விவசாயி மீது குண்டர் சட்டம் போட்டிருப்பது எந்த ஆட்சியிலும் நடந்தது இல்லை. இது உண்மையிலேயே விவசாயிகள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைத் தவிர்த்து பிற கடலோர மாவட்டங்களில் பெய்த கனமழையால் விளைநிலங்கள் கடுமையாக பாதித்தும், குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தும் மக்கள் விவசாயிகள் துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் நிலையில் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை'' என்று விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x