Published : 26 Nov 2023 05:17 PM
Last Updated : 26 Nov 2023 05:17 PM
கோவை: "ஒருவேளை தமிழக அரசு செந்தில் பாலாஜிக்கு சிறந்த மருத்துவத்தையோ, அவருடைய உடல்நிலையையோ கவனிக்க முடியாவிட்டால், மத்திய அரசின் உதவியைக்கூட நாடலாம். எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளுக்குக்கூட அவரை அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கலாம். எனவே, மாநில அரசு அதுகுறித்தும் யோசிக்க வேண்டும்" என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் மண்டல் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் 107-வது மனதின் குரல் நிகழ்ச்சி கேட்கும் நிகழ்ச்சியில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "ஆவின் நிர்வாகம் மக்களுக்கு பால் வழங்குவது ஒருபுறம் இருந்தாலும், விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதலை ஏன் குறைத்துக் கொண்டார்கள்? என்ற கேள்விக்கு அரசிடம் எந்த பதிலும் கிடையாது. பாஜக இந்த விசயத்தை கையில் எடுத்தால், எங்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். பாஜக மாநிலத் தலைவர் மீது, ரொம்ப தரக்குறைவான குற்றச்சாட்டை அமைச்சர் வைக்கிறார். மக்கள் பிரச்சினைகளை சுட்டிக்காட்டுவதுதான், எதிர்க்கட்சிகளின் வேலை.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை அடிக்கடி மோசமாகிக் கொண்டிருக்கிறது என்பது ஒரு மனிதாபிமானத்தின் அடிப்படையில் எங்களுக்குமே வருத்தமாகத்தான் உள்ளது. ஒருவேளை சிறைத்துறை சரியாக அவரை கவனிக்கவில்லையா? தமிழக அரசின் கண்காணிப்பின்கீழ்தான் அவர் இருக்கிறார். ஒரு அமைச்சருக்குக்கூட சிறையில் உணவும், மருத்துவ வசதிகளும் சரியாக இல்லாததால்தான், அவருக்கு திரும்பத்திரும்ப உடல்நிலை சரி இல்லாமல் போகிறது என்பது எங்களுக்கு வரக்கூடிய செய்திகளில் இருந்து தெரியவந்திருக்கிறது.
ஒருவேளை தமிழக அரசு அவருக்கு சிறந்த மருத்துவத்தையோ, அவருடைய உடல்நிலையையோ கவனிக்க முடியாவிட்டால், மத்திய அரசின் உதவியைக்கூட நாடலாம். எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளுக்குக்கூட அவரை அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கலாம். எனவே, மாநில அரசு அது குறித்தும் யோசிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT