Last Updated : 26 Nov, 2023 02:57 PM

 

Published : 26 Nov 2023 02:57 PM
Last Updated : 26 Nov 2023 02:57 PM

''ஊழல் செய்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' - நாராயணசாமி வலியுறுத்தல்

நாராயணசாமி | கோப்புப் படம்.

புதுச்சேரி: ஊழல் புரிந்துள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மீது பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: "புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இது ஊழல் மலிந்த ஆட்சி. அதற்கான அறிகையை தயாரிக்க ஆயத்த வேலை நடக்கிறது. கலால்துறை, உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை, கல்வித்துறை, காவல்துறை ஆகியவற்றில் ஊழல் மட்டுமில்லாமல் முதல் அமைச்சர், அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு பட்டியலை தயார் செய்து வருகிறோம்.

முதல்வர் ரங்கசாமி வியாபாரமோ, தொழிலோ செய்யாமல் ரூ. 5 கோடியில் திருமண மண்டபத்தை மேட்டுப்பாளையத்தில் கட்டுகிறார். இதற்கான நிதி ரங்கசாமிக்கு எங்கிருந்து வந்தது. இது ஊழல் பணம். கலால்துறை ஊழல் மற்றும் பொதுப் பணித்துறை லஞ்சப்பணத்திலும் இந்த திருமண மண்டபத்தை கட்டுகிறார். எந்த தொழிலும் செய்யாத முதல்வர் ரங்கசாமிக்கு, ரூ. 5 கோடி எங்கிருந்து கிடைத்தது என்று பதில் சொல்லவில்லை. அமைச்சர் ஒருவர் நகரப்பகுதியில் ஓர் இடத்தை மனைவியின் பெயரில் கிரயம் பெற்றுள்ளார். அது வங்கி இருந்த இடம். அது தரைமட்டமாக்கப்பட்டு, தடுப்பு போடப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கு பணம் எங்கிருந்தது வந்தது. அவர் பாஜகவைச் சேர்ந்தவர். இதுபோல் பல உதாரணங்கள் இருக்கின்றன.

ஊழலை ஒழிப்பேன், நேர்மையான ஆட்சியை தரவே பிரதமராக இருக்கிறேன் என்றெல்லாம் நரேந்திர மோடி கூறுகிறார். அவரது கட்சி புதுச்சேரி கூட்டணியில் உள்ளது. முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை ஊழலில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது. உண்மையில் ஊழலை ஒழிப்பதாக இருந்தால் முதல்வரையும், அமைச்சரையும் சிறையில் தள்ள வேண்டும். மக்களை ஏமாற்றுவதற்காக ஊழல் இல்லாத ஆட்சி தருவதாக மோடி புலம்புகிறார். பிரதமர் அனைத்து மாநிலங்களையும் கண்காணிக்கிறார். தற்போதைய குற்றச்சாட்டு தொடர்பாக பிரதமர் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஊழலுக்கு ஆதரவாக இருப்பதாகதான் அர்த்தம்.

ஊழல் செய்யாவிட்டால் முதல்வரும், அமைச்சரும் பதில் சொல்லட்டும். ஆதாரத்தை காட்டுகிறேன். இதில் ஆளுநரும் கூட்டுக்கொள்ளை. அதனால்தான் குடியரசுத் தலைவரை பார்க்க போகிறோம். 5 மாநிலத் தேர்தல்களில் நான்கில் காங்கிரஸ் வெல்லும். காங்கிரஸில் கோஷ்டி மோதல் பற்றி கேட்கிறீர்கள். எந்த கட்சியில்தான் கோஷ்டி இல்லை. பாஜக உள்ளிட்ட எக்கட்சியில் தான் கோஷ்டி இல்லை. இந்தியாவில் உள்ள எல்லாக் கட்சியிலும் கோஷ்டி உள்ளது." இவ்வாறு நாராயணசாமி குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x