Last Updated : 26 Nov, 2023 01:48 PM

 

Published : 26 Nov 2023 01:48 PM
Last Updated : 26 Nov 2023 01:48 PM

''காவிரி நீர் இல்லாததால் நெல் கொள்முதல் 3 லட்சம் டன் குறைந்துள்ளது'': அண்ணாமலை குற்றச்சாட்டு

கருப்பூர் கிராமத்தில் வயலில் இறங்கி நாற்றங்கால்களை நடவு செய்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை | படங்கள் ஆர் வெங்கடேஷ்

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் காவிரி நீர் வரத்து இல்லாததால், நெல் கொள்முதல் 3 லட்சம் டன் குறைந்துவிட்டது என பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகம் முழுவதும் "என் மண் என் மக்கள் நடைப்பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இன்று (நவ.26) காலை வந்தார். திருவையாறு தொகுதிக்கு உட்பட்ட நடுக்காவிரியில் நடைப்பயணத்தை தொடங்கிய அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர், நவம்பர் 8-ம் தேதி வரை 8.25 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நிகழாண்டு இதே காலகட்டத்தில் 3 லட்சம் டன் குறைந்து, 5.25 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் இல்லாததால் மகசூல் குறைந்து, கொள்முதல் குறியீடும் குறைந்துவிட்டது. காவிரியில் தண்ணீர் வராவிட்டால், என்னவாகும் என்பதற்கு இந்த ஒரு ஆண்டு குறியீடே சாட்சி.

இந்தப் பகுதியில் மீத்தேன், நிலக்கரி போன்ற திட்டங்கள் வரக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. ஆனால் தமிழக அரசு டெல்டா பகுதி மக்களை வஞ்சிக்கிறது. இண்டியா கூட்டணியில் திமுக இடம் பெற்றுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெங்களூரு கூட்டத்துக்கு சென்றுவிட்டு காவிரி குறித்து வாயைத் திறக்காமல் வந்தார். மாநில அரசு காவிரியில் தண்ணீரைப் பெற்றுத் தராததால், கொள்முதல் குறியீடு குறைந்துவிட்டது.

கடந்த 1924-ம் ஆண்டு போடப்பட்ட காவிரி ஒப்பந்தத்தை 1974-ம் ஆண்டு கருணாநிதி புதுப்பிக்கத் தவறினார். இதனால் கர்நாடகத்தில் ஹேமாவதி, கபினி என வரிசையாக அணை கட்டப்பட்டது. எனவே, கடந்த 80 ஆண்டுகளாக காவிரியில் அரசியல் காரணங்களுக்காக நிறைய விஷயங்கள் விட்டுக் கொடுக்கப்பட்டன. இதனால் காவிரியில் தண்ணீர் வரத்து குறைந்து, தரிசு நிலம் அதிகமாகிவிட்டது.

காவிரியில் கடந்த 1974-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நம்முடைய உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்டன. இதனால், காவிரியில் வரக்கூடிய தண்ணீரின் அளவு குறைந்து, நிகழாண்டு நெல் கொள்முதல் 3 லட்சம் டன் குறைந்துவிட்டது" என்று அவர் கூறினார். இந்த சந்திப்பின் போது, பாஜக மாநிலப் பொதுச் செயலர் கருப்பு எம். முருகானந்தம், விவசாய அணி மாநிலப் பொதுச் செயலர் பூண்டி எஸ். வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முன்னதாக, நடுக்காவேரி குடமுருட்டி ஆற்றில் மலர் தூவி ஆரத்தி எடுத்து வழிபட்டார். பின்னர் கருப்பூரில் வயலில் பெண்கள் நடவு செய்து கொண்டிருந்ததைப் பார்த்தார். அவர்களுடன் அண்ணாமலையும் வயலில் இறங்கி நாற்றங்கால்களை நடவு செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x