Published : 26 Nov 2023 01:37 PM
Last Updated : 26 Nov 2023 01:37 PM

அரசமைப்புச் சட்ட நாளில் நமது அரசமைப்புச் சட்டத்தின் நிலைத்த மதிநுட்பத்தைப் போற்றுவோம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: "அண்ணல் அம்பேத்கருக்குச் சிலை வடிவிலான புகழ்வணக்கம் என்பது வெறும் நினைவுகூர்தல் அல்ல, அது அவர் வகுத்தளித்த நீதி, சமத்துவம் மற்றும் மக்களாட்சி மாண்புகளின் மீது நாம் கொண்டுள்ள பற்றுறுதியின் அடையாளச்சின்னம்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உச்சநீதிமன்ற வளாகத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிலை திறக்கப்படும். இந்தச் சிறப்புமிகு அரசமைப்புச் சட்ட நாளில், நமது அரசமைப்புச் சட்டத்தின் நிலைத்த மதிநுட்பத்தைப் போற்றுவோம்.

அரசமைப்புச் சட்டத்தின் உயர்பண்புகளை நீதித்துறையில் காப்பதற்காக அயராது பாடுபடும் நீதியின் பாதுகாவலர்களுக்கு நமது நெஞ்சார்ந்த வணக்கத்தைச் செலுத்துவோம். அண்ணல் அம்பேத்கருக்குச் சிலை வடிவிலான புகழ்வணக்கம் என்பது வெறும் நினைவுகூர்தல் அல்ல, அது அவர் வகுத்தளித்த நீதி, சமத்துவம் மற்றும் மக்களாட்சி மாண்புகளின் மீது நாம் கொண்டுள்ள பற்றுறுதியின் அடையாளச்சின்னம் ஆகும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

தேசிய அரசியல் சாசன தினம் எனப்படும் சட்ட தினம் (சம்விதான் திவாஸ்) ஆண்டுதோறும் நவம்பர் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்:

  • இந்திய அரசியல் சாசன சட்டம், கடந்த 1949-ம் ஆண்டு நவ.26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாள் அரசியல் சாசன சட்ட தினமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
  • அரசியல் சாசனத்தை உருவாக்க 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் தேவைப்பட்டன. சாசனத்தின் இறுதி வடிவம், 395 ஷரத்துகள், 8 அட்டவணைகளைக் கொண்டுள்ளது.
  • பிரிட்டன், அயர்லாந்து, ஜப்பான், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட 10 நாடுகளிடம் இருந்து சில அம்சங்கள் இந்திய அரசியல் சாசனத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன.
  • இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் அரசியலமைப்பு சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் இருந்தார். இவரே இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
  • இந்திய அரசியலமைப்பு சாசனம் கையால் எழுதப்பட்ட ஆவணமாகும். இது உலகிலேயே கையால் எழுதப்பட்ட, மிக நீண்ட ஆவணங்களில் ஒன்றாகும். இதன் ஆங்கில வடிவத்தில் மொத்தம் 1,17,369 வார்த்தைகள் உள்ளன.
  • கையால் எழுதப்பட்ட அரசியலமைப்பு ஆவணப் பிரதி, ஹீலியம் வாயுவால் நிரப்பப்பட்டு, நாடாளுமன்ற வளாகத்தின் நூலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.
  • அசல் கையெழுத்து ஆவணத்தில் 283 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
  • இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு இந்திய அரசு சட்டம் 1935-ஐக் கொண்டு உருவாக்கப்பட்டது.
  • இந்திய அரசியலமைப்பின் முன்னுரை இதுவரை ஒரே ஒரு முறை (1976 டிசம்பர் 18 அன்று அவசர நிலையின்போது) மட்டுமே திருத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x