Published : 26 Nov 2023 12:36 PM
Last Updated : 26 Nov 2023 12:36 PM

''மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து கட்சித் தலைமை பார்த்துக்கொள்ளும்'': மா.செ. கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: "மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை,யார் வெற்றி பெறுவார்களோ, அவர்தான் வேட்பாளராக இருப்பார்கள். இந்த தொகுதியில் இவர்தான் வேட்பாளர் என்ற உறுதி எல்லாம் இப்போது வரை இல்லை.மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து கட்சித் தலைமை பார்த்துக் கொள்ளும்" என்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. திமுக சார்பில், அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. மண்டல வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இதுதவிர, சேலத்தில் டிச.17-ம் தேதி திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இதை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மாநாட்டை நடத்துவது குறித்து ஆலோசிக்க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை திமுக தலைமை இன்று கூட்டியுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டம், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு தொடர்பாகவும், மக்களவைத் தேர்தலுக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பணிகள் குறித்தும் விவாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறவுள்ள சேலம் மாநாட்டை பிரமாண்டமாக நடத்துவது, மற்றும் மாநாட்டில் கலந்துகொள்ள வருகைதரும் தொண்டர்கள் மற்றும் கட்சியினருக்கான ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனைகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. அதேபோல், வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பணிப்பகிர்வு குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்துக்குப்பிறகு, தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், இளைஞரணி பொறுப்பாளர்கள், திமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இனி எந்தக் காலத்திலும், மகளிர் வாக்குகள் திமுகவுக்குத்தான் என்பதில், எள் முனை அளவும் சந்தேகம் வேண்டியது இல்லை. இளைஞரணி செயலாளராக உதயநிதி பொறுப்பேற்ற பிறகு, இளைஞரணியின் செயல்பாடுகள் பன்மடங்கு வேகமெடுத்துள்ளது. இன்றைக்கு, திமுக இளைஞரணி 25 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. தமிழகத்தில் புதிய வாக்காளர்களையும், இளைஞர்களின் வாக்குகளை ஈர்க்கும் எஃகு கோட்டையாக திமுக இருந்து வருகிறது.

சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணியின் மாநாட்டை பிரமாண்ட மாநாடாக நடத்த வேண்டும். இந்த மாநாட்டுக்கு ஒரு சட்டமன்றத் தொகுதியில் இருந்து குறைந்தபட்சம், ஆயிரம் இளைஞர்களைத் திரட்டி மாநாட்டுக்கு அழைத்து வரவேண்டும். 5 லட்சம் பேர் கலந்துகொள்ளும் மாநாடாக இருக்க வேண்டும்.

மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை, நாம் கைக்காட்டும் ஒருவர்தான் பிரதமராக வரவேண்டும். அதற்கு நாம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் இண்டியா கூட்டணி வலுவாக இருக்கும். இத்தேர்தலைப் பொறுத்தவரை, யார் வெற்றி பெறுவார்களோ, அவர்தான் வேட்பாளராக இருப்பார்கள். இந்த தொகுதியில் இவர்தான் வேட்பாளர் என்ற உறுதி எல்லாம் இப்போது வரை இல்லை. மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து கட்சித் தலைமை பார்த்துக் கொள்ளும்" என்று பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x