Published : 26 Nov 2023 05:37 AM
Last Updated : 26 Nov 2023 05:37 AM

அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறாத ஆவணம்: சட்ட பல்கலைக்கழக விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இந்திய அரசியலமைப்பு சட்ட தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமார் நினைவுப் பரிசு வழங்கினார். உடன், பதிவாளர் கவுரி ரமேஷ், மூத்த பேராசிரியர் சீனிவாசன் உள்ளிட்டோர். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது என்று சட்டப் பல்கலை விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டதின விழா சென்னை பெருங்குடியில் உள்ள அதன் வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் ஆளுநரின் முன்னிலையில் சட்ட பல்கலைக்கழக மாணவர்கள் அரசியலமைப்பு தின உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: நமது அரசியலமைப்பு சட்டமானது தீண்டாமையை நீக்குவதுடன், அனைத்து தரப்புக்குமான சமத்துவத்தை கொண்டதாக இருக்க வேண்டும். தற்போதைய காலத்தில் எளிய மக்களுக்கு நீதி கிடைப்பது விலை உயர்ந்ததாக உள்ளது. சுதந்திரத்துக்காக போராடும் போது நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தோம். அதன்பின் அவரவர்தாய் மொழி என்று மாநிலங்கள்அளவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளோம். மேலும், நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்தும் பல்வேறு கருத்துகள் பரவி வருகின்றன.

அதைவிடுத்து நாம் தனித்துவம் வாய்ந்த நாட்டில் வாழ்கிறோம் என்பதை உணர்ந்து, நமது அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றும் பணிகளை முன்னெடுக்க வேண்டும். ஒரு நாடு சுதந்திரம் பெற்றபின் அதன் மக்கள் வளர்ச்சியை நோக்கிநகர வேண்டும். ஆனால், இங்கு குறிப்பிட்ட சிலர் மட்டுமே வளர்ச்சி பாதையில் செல்கின்றனர். நமது அரசியலமைப்பு சட்டம் தனித்துவம் வாய்ந்த பல்வேறு குழுக்கள் மூலம் மிகுந்த அழுத்தங்களுக்கு இடையே உருவாக்கப்பட்டது. அதனால்தான் இன்றளவும் அது முழுமை பெறாத ஆவணமாகவே உள்ளது.

அதேபோல், அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா என்பது குறித்து நாம் விவாதிக்க வேண்டும். நீதிமன்றங்களில் மட்டும் இல்லாமல் சட்டப் பல்கலைக்கழங்களிலும் அரசியலமைப்பு சட்டம் குறித்துகலந்துரையாடுவது அவசியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.எஸ். சந்தோஷ் குமார், பதிவாளர் கவுரி ரமேஷ், பேராசிரியர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திடீர் டெல்லி பயணம்: இந்நிலையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இருக்கும்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி சென்றுள்ளார். முன்னதாக ஆளுநர் மீது தமிழக அரசு தொடர்ந்து வழக்கு கடந்த 20-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதற்கு முன்னதாக 19-ம் தேதி ஆளுநர் டெல்லி சென்று நீதிமன்றத்தில் விளக்கமளித்தார்.

இந்நிலையில், நேற்று மாலை திடீரென டெல்லி சென்றார். அவருடைய உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரியும் உடன் சென்றனர். டெல்லி பயணத்தை முடித்து கொண்டு இன்று இரவு ஆளுநர் சென்னை திரும்ப உள்ளார்.டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சட்ட நிபுணர்களை ஆளுநர் சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x