Published : 26 Nov 2023 05:40 AM
Last Updated : 26 Nov 2023 05:40 AM
சென்னை: சென்னை மாநில கல்லூரியில் நிறுவப்பட்ட முன்னாள் பிரதமர் வி.பி.சிங்-கின் சிலையை முதல்வர் நாளை திறந்து வைக்கிறார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு சார்பில் முன்னாள் இந்திய பிரதமர் வி.பி.சிங்-குக்கு சென்னை மாநில கல்லூரியில் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வி.பி.சிங் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
வி.பி.சிங் இந்திய பிரதமாக இருந்த போதுதான் காவிரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்ப்பாயத்தை அமைத்து தந்தார். உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்துக்கு அண்ணாவின் பெயரையும் சூட்டினார்.
மேலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக பி.பி.மண்டல் தலைமையில் கமிஷன் அமைத்து, 2-வது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால், அரசு பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை செயல்படுத்தினார்.
எனவே, வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் தமிழக அரசின் சார்பில் சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் அவரது சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடக்கிறது. இதில், உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT