Published : 26 Nov 2023 04:06 AM
Last Updated : 26 Nov 2023 04:06 AM

“தொழிற் துறை வளர்ச்சியில் தமிழகம் 2-வது இடத்தில் இருப்பதற்கு காரணம் கருணாநிதி” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை கலைவாணர் அரங்கத்தில், நடைபெற்ற ‘நிறுவனங்களின் நாயகர் - கலைஞர்’ நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப் பட்டிருந்த சிறப்பு புகைப்படக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

சென்னை: இந்தியாவில், தொழில் வளர்ச்சியில் தமிழகம் 2-வது இடத்தில் இருப்பதற்கு காரணம் முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் என்று, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘நிறுவனங்களின் நாயகர் - கலைஞர்' கருத்தரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார். சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி முன்னிலை வகித்தார். விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ‘நிறுவனங்களின் நாயகர் - கலைஞர்' சிறப்பு மலரை வெளியிட்டார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது: பல்வேறு முதன்மையான திட்டங்களை தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு தந்தவர் கருணாநிதி. தொழில் வளர்ச்சியில் தமிழகம், இந்தியாவில் 2-வது இடத்தில் இருப்பதற்கு காரணம் கருணாநிதி தொழில் துறையில் செய்த சாதனைகள் தான். தமிழகத்தில் திறன் மேம்பாட்டு கழகம், மகளிர் சுய உதவி குழுக்கள், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், பஞ்சாலை கழகம், மேம்படுத்தப்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற கழகம் போன்றவற்றை உருவாக்கினார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தை கருணாநிதி உருவாக்கிய பின்னர் தான் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. தொழில் துறையை கருணாநிதி அணுகிய விதம் வித்தியாசமானது. 2000-ம் ஆண்டில் அவர் கொண்டு வந்த சென்னை டைட்டல் பூங்கா மாபெரும் தகவல் தொழில் நுட்ப புரட்சியை ஏற்படுத்தியது.

படம்: ம.பிரபு

இந்த சாதனைகளால் தான் தமிழகம் உலக வரைபடத்தில் முக்கிய இடத்தை பிடித்தது. பொருளாதார மேம்பாடு, சமூக மேம்பாடு இரண்டுக்கும் முக்கியத்துவம் அளித்து கருணாநிதி கொண்டு வந்த ஒவ்வொரு திட்டத்தையும், இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார். இந்த பயணம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கலைவாணர் அரங்கில் 'நிறுவனங்களின் நாயகர் - கலைஞர்' சிறப்பு புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். 3 நாட்கள் நடைபெறும் கண்காட்சியில், தமிழகத்தில் கருணாநிதி தொடங்கிவைத்த 41 நிறுவனங்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெற்றிருந்தன. நிகழ்வின் முடிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்கை பார்வையிட்டார்.

இந்நிகழ்வில், அமைச்சர்கள் க.பொன்முடி, தா.மோ.அன்பரசன்,மா.சுப்பிரமணியன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகத் துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பொன்னையா,

அப்போலோ மருத்துவமனை துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி, விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், காவேரி மருத்துவமனை நிறுவனர் சந்திர குமார், கங்கா மருத்துவமனை தலைவர் ராஜ சேகரன், டிவிஎஸ் நிறுவனத் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன், தியாகராஜர் பொறியியல் கல்லூரி தலைவர் கருமுத்து ஹரி தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x