Published : 26 Nov 2023 04:02 AM
Last Updated : 26 Nov 2023 04:02 AM
சென்னை: தமிழகத்தில் கோயில் நிலங்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கின்றன என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல, கோயில் சிலைகள் திருடப்பட்டுள்ளன. இவ்வாறு திருடப்பட்ட சிலைகளை வெளி நாடுகளில் இருந்து மீட்டு தமிழகத்துக்கு கொண்டு வந்தது பிரதமர் மோடிதான்.
பல கோயில்களின் நிலங்கள் காணாமல் போய் விட்டன. 1986-ம் ஆண்டு அறநிலையத் துறையின் கொள்கை விளக்கப் புத்தகத்தில், 5.25 லட்சம் ஏக்கர் அளவில் கோயில்களுக்குச் சொந்தமாக நிலங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் தான் இருப்பதாக கூறுகிறார்கள். மீதமுள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ளது யார்?
அதற்கான வாடகை எங்கே? கோயில் நிலத்தை ஆக்கிரமித்த எத்தனை பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது? தமிழகத்தில் ஏறத்தாழ 1.35 லட்சம் ஏக்கர்கோயில் நிலத்துக்கு எவ்வித ஆவணமும் அரசிடம் இல்லை. இதுகுறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கோயில் நிலங்களை மீட்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆவின் விவகாரம்: ஆவின் நிறுவனம் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை நிறுத்தியது, மக்களிடம் கொள்ளையடிக்கத்தான். கால் நடைகளுக்கான பிரத்யேக மொபைல் ஆம்புலன்ஸ் சேவையை பிரதமர்மோடி அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தி கொண்டிருக்கிறார். 1962 என்ற எண்ணை தொடர்பு கொண்டால், விவசாயிகளின் வீட்டுக்கே ‘மொபைல் ஆம்புலன்ஸ்’ வாகனம் சென்று, கால் நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பல மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கி ஓராண்டாகிறது.
அந்த ஆம்புலன்ஸ்களின் நிலை என்ன என்பது குறித்து தமிழக அரசு மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர்களை அமலாக்கத் துறை குற்றவாளிகளாக கருதவில்லை. எவ்வளவு மணல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கம் கேட்கத்தான் அவர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் எப்போதும் உட்கட்சி மோதல் இருந்து கொண்டு தான் இருக்கும். உட்கட்சி மோதலுக்காக காங்கிரஸில் தனிப் பிரிவையே தொடங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT