Published : 26 Nov 2023 04:10 AM
Last Updated : 26 Nov 2023 04:10 AM
ஊரப்பாக்கம்: தாம்பரம் அருகே ஊரப்பாக்கம் ஊராட்சியில் திரும்பிய பக்கமெல்லாம் தெருக்கள், சாலைகளில் குப்பைகள் தேக்க மடைந்துள்ளன. இதனால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சுமார், 1 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இப்பகுதியில் ஒரு நாளைக்கு, 12 டன் குப்பைகள் சேருகின்றன. தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் ௭ன மொத்தம் 52 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். 9 டிராக்டர்கள், 10 பேட்டரி வாகனங்கள் உள்ளன. ஆனால் இவை பயன்படுத்தப் படாமல் வீணாக ஊராட்சி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது.
மேலும், தூய்மைப் பணியாளர்களால் திட்டமிட்டபடி சாலைகள், தெருக்கள், குடியிருப்புகளில் குப்பைகளை சேகரிக்க முடியவில்லை. அதனால், பல தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாமல் மலைபோல் குவிந்தும், சிதறியும் கிடக்கின்றன. மக்கள் அந்த சாலைகள், தெருக்களில் நடந்து செல்லவே முடியாத நிலை உள்ளது. மழை பெய்தால் குப்பைகள் நனைந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதுபோல், வீடுகளிலும் குப்பைகள் சேகரிக்க ஊழியர்கள் வராமல் குப்பை தேங்குகிறது.
சமீப காலமாக இந்த நகர் பகுதியில் பல இடங்களில் குப்பைத் தொட்டிகள் நிரம்பிய நிலையில், நாள் கணக்கில் அள்ளப்படாமல் இருப்பதால் இப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிதறும் குப்பைக் கழிவுகள் காற்றில் பறந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. ஊராட்சி சார்பில் நகரில் பல இடங்களில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்து கின்றனர்.
ஊராட்சி நிர்வாகம் செயலிழந்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் விளக்கம் கேட்டு ஊராட்சி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ஊராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸுக்கு இதுவரை விளக்கம் அளிக்கவில்லை என தெரிகிறது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர் மணிவேல் என்பவர் கூறியதாவது: ஊராட்சியில் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட, 14 ஊராட்சி உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஊராட்சி நிர்வாகம் முடங்கியுள்ளது. மக்கள் பணி எதுவுமே சரிவர நடைபெறவில்லை. குப்பைகள் இல்லாத சாலைகளே இல்லை என்ற நிலை ஊரப்பாக்கத்தில் உள்ளது. காலி மனைகளில் எங்கு பார்த்தாலும் மழை நீர் தேங்கி கொசு உற்பத்தி மையமாக திகழ்கிறது.
மக்கள் பிரச்சினை மீது கவனம் செலுத்த வேண்டிய உள்ளாட்சி பிரதிநிதிகள் தனிப்பட்ட நோக்கத்துக்காகவே செயல்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் ஊரப்பாக்கம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும். இங்கு, நாளுக்குநாள் சுகாதார சீர்கேடு அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக நாளிதழ்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றன.
ஊராட்சி நிர்வாகம் முற்றிலும் செயலிழந்து விட்டது. ஊராட்சி முழுவதும் அகற்றப்படாத குப்பைகள் பெரிய அளவில் மக்களை சிரமத்துக் குள்ளாக்குகிறது. ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் கழிவுநீர் காரணமாக கொசுக்கள் ௮திக ௮ளவில் உற்பத்தியாகி நாள் தோறும் மக்கள் அவதியடைகின்றனர்.
முறையாக வரி செலுத்தியும் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் துன்பப் படுகின்றனர். இந்த நிலைக்கு மாவட்ட நிர்வாகத்தின் பாராமுகம், ஊராட்சியின் திறமையற்ற நிர்வாகம் இந்த இரண்டுமே காரணம். எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் தரும் விளக்கத்தைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT