Published : 25 Nov 2023 12:40 AM
Last Updated : 25 Nov 2023 12:40 AM
ராணிப்பேட்டை: வாலாஜா அருகே தனியார் ரசாயன தொழிற்சாலையில் உள்ள பெரிய டேங்க்கில் இருந்து ரசாயன கலவை வெடித்து சாலையில் வழிந்தோடியது. இந்த தகவலறிந்துவிரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ரசாயனத்தின் வீரியத்தை கட்டுப்படுத்தினர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த முசிறி கிராமம் அருகே தனியாருக்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை கடந்த 8 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பெரிய நெகிழி தொட்டிகள் மொத்தம் 8-க்கும் மேற்பட்டவை உள்ளன. இதில், பாலி அலுமினியம் குளோரைடு தயாரித்து சேமித்து வைக்கப்படுகிறது. இவை, காகித தொழிற்சாலைக்கு காகிதங்களை வெண்மையாக்கவும், குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கும், தோல் தொழிற்சாலைகளுக்கும் கழிவுகளை சுத்தம் செய்ய இந்த ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிறுவன வளாகத்தில் ரசாயன கலவை சேமித்து வைத்துள்ள 30 ஆயிரம் லிட்டர் (30 KL) கொள்ளளவு கொண்ட நெகிழி தொட்டி ஒன்று நேற்று அதிகாலை 5.30 மணியளவில் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. தொட்டியில் இருந்த ரசாயனம் வளாகம் மற்றும் சாலையிலும் ஓடியது. இதனால், இதன் அருகே உள்ள பொதுமக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமிநாராயணன் தலைமையிலான உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் திருமுருகன் மற்றும் 15-க்கும் மேற்பட்ட வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், சாலையில் ஓடிய ரசாயன கலவையின் மீது எம்-சாண்ட் கொட்டியும் சீரமைப்புபணிகளை மேற்கொண்டனர். 3 மணி நேரம் போராடி ரசாயனத்தின் வீரியத்தை தீயணைப்புத் துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சம்பவம் நடந்த இடத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். ரசாயனத்தின் வீரியத்தை போக்க அது வழிந்தோடிய பகுதிகளில் சுண் ணாம்பை கொட்டவும் தீயணைப்புத் துறையினருக்கு அறிவுறுத்தினர். தொடர்ந்து, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்து தொழிற்சாலையை பார்வையிட்டனர். விபத்து நடந்த காரணம் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து, அப்பகுதியில் காற்று மாசு அளவிடும் கருவி கொண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், காற்றில் ஆக்சிஜன் அளவு அப்பகுதியில் சரியாக உள்ளது, பாதிப்பு ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT