Published : 25 Nov 2023 11:57 AM
Last Updated : 25 Nov 2023 11:57 AM

குன்னூரில் மழை பாதிப்பு பகுதிகளில் மீட்புப் பணி தீவிரம்: பழங்குடியின கிராமத்துக்கு செல்லும் சாலை துண்டிப்பு

மண் சரிவு ஏற்பட்டதால் துண்டிக்கப்பட்டுள்ள ஆனைப்பள்ளம் பழங்குடியினர் கிராமத்துக்கு செல்லும் சாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் சீரமைப்பு பணி.

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, குன்னூர்அருகே ஆனைப்பள்ளம் பழங்குடியின கிராமத்துக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர் ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவுமுதல் விடிய, விடிய கன மழை பெய்தது. இந்த மழையால் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதுடன், மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கீழ்கோத்தகிரியில் நட்டக்கல்செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால், ஆதிவாசி மக்கள் ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலை குஞ்சப்பனை அருகே 2-வது வளைவில் பெரிய அளவில் மண் மற்றும் பாறைகள் சரிந்து சாலையில் விழுந்தன.

இதனால், ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டன. மண் சரிவு ஏற்பட்ட குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை 6மணி நேரத்திலும், கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலை 10 மணி நேரத்திலும் சீர் செய்யப்பட்டன. இதனிடையே, குன்னூரில் பெய்த கன மழையில் நீர் இடி விழுந்து, ஆனைப்பள்ளம் பழங்குடியின கிராமத்துக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. இந்த கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குரும்பர், இருளர் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பாறைகள், மண் சரிந்து விழுந்ததால் சாலை துண்டிக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்கள் வாங்க 6 கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்று வருகின்றனர்.இந்த கிராமத்துக்கு செல்லும் சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

குன்னூரில் மழை பாதிப்பு பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட முகாமிட்டுள்ள
மாநில பேரிடர் மீட்புப் படையினர்.

பள்ளிகளுக்கு விடுமுறை: கன மழை பாதிப்பு காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் 2-வது நாளாக கோத்தகிரி, குன்னூர்தாலுகாக்களிலுள்ள பள்ளிகளுக்குமட்டும் நேற்று விடுமுறை அளித்து, ஆட்சியர் மு.அருணா உத்தரவிட்டார். மீட்புப் பணிகளை மேற்கொள்ள, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை சார்பு ஆய்வாளர் ராஜபாண்டி தலைமையில் 30 பேர் கொண்ட குழு குன்னூரில்முகாமிட்டுள்ளது. இவர்கள், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற் கொள்கின்றனர். நேற்று மழை பெய்யாததால், மீட்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. சாலையோரங்களில் அபாயகரமான மரங்களை வெட்டி அகற்றிவருகின்றனர். மேலும், மண்சரிவுஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x