Published : 25 Nov 2023 11:47 AM
Last Updated : 25 Nov 2023 11:47 AM
கோவை: பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த நிர்வாக அனுமதி அளித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது, புதிய விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து கடந்த பல மாதங்களாகப் போராடி வரும் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் முறையிடசென்ற மக்கள் மீது காவல்துறையினர் அடக்குமுறையை ஏவிவிட்டு கைது செய்துள்ளனர். திமுக அரசின் இந்த ஜனநாயக விரோத, பாசிச நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பரந்தூர் விமான நிலையத்தால், நீர்நிலைகள், நீர்வழித்தடங்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கை வெளிவராத நிலையில், நிலம் கையகப்படுத்த நிர்வாக அனுமதி அளித்து, அரசாணை வெளியிடப்பட்டிருப்பதுதான் விவசாயிகளை, பொதுமக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இதற்காக முறையிட வந்த விவசாயிகளிடம் பேச்சு நடத்தி தீர்வு காணாமல் அடக்குமுறையை ஏவி கைது செய்திருப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. கைது செய்யப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். விவசாயிகளின் ஒப்புதலுடன்தான் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT