Published : 25 Nov 2023 06:25 AM
Last Updated : 25 Nov 2023 06:25 AM
அரூர்: கடத்தூர் பேரூராட்சியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் நெரிசல் நிலவுவதால் பழைய பேருந்து நிலையத்தையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சி வணிகத்தில் வளர்ந்து வரும் பேரூராட்சியாகும். 25-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் வந்து செல்லும் நகரமாக கடத்தூர் உள்ளது. இதனால் வர்த்தக நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. கடத்தூரைச் சுற்றி 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன.
இதுதவிர, கடத்தூரில் இருந்து தருமபுரிக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு தினமும் அதிகளவிலான மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். இதனால், கடத்தூர் புதிய பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. பேருந்து நிலையப்பகுதியில் இரு சக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவை நிறுத்தப்படுவதால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெறுகின்றன.
மேலும், கடத்தூரைச் சுற்றி உள்ள விவசாயிகள் விளைப்பொருட்களான பூக்கள், காய்கறிகள், பழங்களை தருமபுரி, சேலம் போன்ற பெருநகரங்களுக்கு அனுப்புவதற்கு கடத்தூர் பேருந்து நிலையத்தில் கூடுகின்றனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க பயன்படுத்தாமல் இருக்கும் பழையப் பேருந்து நிலையத்தையும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது: தினசரி நெரிசலில் சிக்கி பயணிகளும், மாணவ, மாணவிகளும் அவதிப்படுவதை தடுக்க தருமபுரியிலிருந்து கடத்தூர் வரும் பேருந்துகளை பழைய பேருந்து நிலையம் வழியாக வந்து செல்லவும், சேலம், பாப்பிரெட்டிப்பட்டி பொம்மிடியிலிருந்து வரும் பேருந்துகளை புதிய பேருந்து நிலையம் வழியாகவும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியும். உடனடியாக மாவட்ட ஆட்சியரும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் கடத்தூர் பேரூராட்சியை ஆய்வு மேற்கொண்டு பழைய பேரூந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT