Published : 25 Nov 2023 06:00 AM
Last Updated : 25 Nov 2023 06:00 AM
சென்னை: நடிகர் மன்சூர் அலிகான், செய்தியாளர் சந்திப்பில் நடிகை த்ரிஷா குறித்து பேசியது சர்ச்சையானது. தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு பரிந்துரைத்தது. இதையடுத்து மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக குஷ்பு பதிவிட்ட செய்தி சர்ச்சையானது. அதாவது, எக்ஸ் தளத்தில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஒருவர் குஷ்புவை டேக் செய்து, `அப்போது ஏன் மகளிர் ஆணையம் வரவில்லை' எனக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த குஷ்பு, `உங்கள்சேரி மொழியில் என்னால் பேச முடியாது' என விளக்கமளித்திருந்தார்.
`சேரி மொழி' என அவர் பயன்படுத்திய வார்த்தை சமூக வலைதளங்களில் பேசு பொருளானது; கண்டனங்களும் எழுந்தன. இதையடுத்து எக்ஸ் தளத்தில் விளக்கமளித்த குஷ்பு, ``பிரஞ்சு மொழியில் `சேரி' என்ற வார்த்தைக்கு `அன்பு'என்பதே பொருள். அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன்” என கூறியிருந்தார். இருப்பினும் சேரி மொழி என்றவார்த்தை பயன்பாட்டுக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. தமிழக காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் எஸ்.சி/எஸ்.டி பிரிவு மாநிலத் தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார், ``குஷ்புவின் தரக்குறைவான பேச்சால் பட்டியலின மக்கள் மனது புண்பட்டுப் போயிருக் கிறது. தமது தவறை திருத்திக் கொண்டுஅந்தப் பதிவை உடனடியாக குஷ்பு நீக்க வேண்டும்.
அதோடு அவர் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் லட்சக்கணக்கான பட்டியலின மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்ப டும்'' என எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால், குஷ்பு வீட்டின் முன்புஎந்நேரத்திலும் போராட்டம் நடைபெறலாம் என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை பட்டினப்பாக்கம் லீத் கேசல் வடக்குத் தெருவில் உள்ள குஷ்பு வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT