Published : 24 Nov 2023 06:45 PM
Last Updated : 24 Nov 2023 06:45 PM
சென்னை: “உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தனக்கு உகந்த வழக்கறிஞரை அழைத்து, அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிந்துகொள்ள வேண்டும். அப்படி அறிந்து கொண்டு அரசமைப்புச் சட்டப்படி அவர் செயல்பட முன்வர வேண்டும்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பாஜக ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களின் ஆளுநர்களை பயன்படுத்துவது தொடர் நிகழ்வாக நடைபெற்று வருகிறது. ஆளுநர்களின் அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளின் காரணமாக தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், டெல்லி, தெலங்கானா போன்ற மாநிலங்களில் சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமலும், மறுபரிசீலனைக்கு சட்டப்பேரவைக்கு திரும்ப அனுப்பாமலும், முடக்கி வைக்கிற போக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்த அடிப்படையில் மாநில உரிமைகளை பாதுகாக்கவும், சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு காலதாமதமின்றி ஒப்புதல் பெறவும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை அணுகின. சமீபத்தில் பஞ்சாப் நீதிமன்றம் ஆளுநரின் அதிகாரங்களை தெளிவாக வரையறை செய்துள்ளது. ஆளுநர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் உள்ள மாநில அரசுகள் நிறைவேற்றுகிற மசோதாக்களுக்கு காலதாமதமின்றி ஒப்புதல் வழங்க வேண்டும். இல்லையெனில், மறுபரிசீலனைக்கு சட்டப்பேரவைக்கு திரும்ப அனுப்ப வேண்டும். ஆனால், இரண்டையும் செய்யாமல் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய 10 மசோதாக்களை தமிழக ஆளுநர் கிடப்பில் போட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த காரணத்தால் 10 மசோதாக்களை தமிழக ஆளுநர் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பினார்.
இந்நிலையில், பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு தமிழ்நாடு, கேரள மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பை தனக்கு உகந்த வழக்கறிஞரை அழைத்து அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிந்துகொள்ள வேண்டும். அப்படி அறிந்து கொண்டு அரசமைப்புச் சட்டப்படி அவர் செயல்பட முன்வர வேண்டும். அப்படி செயல்படவில்லை எனில் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு தமிழக ஆளுநர் ஆளாக வேண்டிய நிலை ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT