Published : 24 Nov 2023 03:41 PM
Last Updated : 24 Nov 2023 03:41 PM
கடலூர்: கடலூர் - மயிலாடுதுறை மாவட்ட எல்லைப் பகுதியான கொள்ளிடம் ஆற்றில், உப்புநீர் உட்புகாதவாறு தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இதைச் செய்தால் 25-க்கும் மேற்பட்ட கரையோர கிராம மக்களின் குடிநீர் பாதிப்பை சரி செய்ய இயலும். பாசன நீரும் சீராகி பழையபடி வளமான விளைச்சல் இருக்கும். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இடது கரையில் ஜெயங்கொண்டப்பட்டினம், பெராம்பட்டு, மேலகுண்டலபாடி, கீழகுண்டலபாடி, வல்லம்படுகை, வல்லத்துறை, தீத்துக்குடி, வடக்குமாங்குடி, தெற்குமாங்குடி, அத்திப்பட்டு, கருப்பூர், நளன்புத்தூர், ஒட்டரப்பாளையம், முள்ளங்குடி, கீழப்பருத்திக்குடி, மேலப்பருத்திக்குடி, வெள்ளூர், குருவாடி உள்ளிட்ட 15-க்கும்மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் கோடை காலத்தில் குறுவை சாகுபடிக்கு மேட்டார் பம்ப்செட்டை பயன்படுத்தி விவசாயம் செய்கின்றனர். மேலும் இக்கிராமங்களில் வீட்டுக்கு வீடு அடி பைப்பும் உள்ளது.
இந்தப் பகுதியை ஒட்டியிருக்கும் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றின் வலது கரை பகுதியில் அளக்குடி, ஆச்சாள்புரம், சரஸ்வதி விளாகம், கீரங்குடி, கொண்ணகாட்டு படுகை, மாதிரவேளூர், பாலுரான்படுகை, பட்டியமேடு, எலத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கோடை காலத்தில் பம்ப் செட் மூலம் குறுவை விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக கொள்ளிடம் ஆற்றில் மிகப் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்படவில்லை. கொள்ளிடம் ஆற்றில் கீழணைக்கு கீழ் பகுதியில் பல இடங்களில் மிகப்பெரிய அளவில் தொட்டி அமைத்து குடிநீருக்காக ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. அவ்வப்போது ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கின் போது, ஆற்றின் நீரோட்டம் சீராக இருக்கும். கடலின் உவர் நீர் நன்னீரோடு சேர்வது தடுக்கப்படும். இதனால் நீர் சூழியல் சமநிலை அடைந்து ஆற்றின் நீரானது உவர்நிலைக்கு செல்வது தடுக்கப்படும்.
மேலும், கொள்ளிடம் ஆற்றின் இப்பகுதியில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களின் பல்வேறு பகுதி தேவைக்காக பயன்படுத்தப்படுகின்றன. பெரும் வெள்ளம் ஏற்பட்டு, நீரோட்டம் சீராகாத நிலையில் தொடர்ந்து குடிநீர் தேவைக்காக நீர் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஆற்றின் நன்னீருடன் உவர்நீர் கலப்பு அதிகமாகி வருகிறது. இதனால் இப்பகுதியில் தண்ணீர் உவர்ப்புச் சுவையாக மாறி வருவதாக நீரியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கடல் நீர் நிலத்தடி வழியாக கொள்ளிடம் ஆற்று பகுதியில் புகுந்து இடதுகரை பகுதியில் மேலபருத்திக்குடி கிராமம் வரை வந்து, தண்ணீரின் சுவை மாறியுள்ளது. இதனால், இப்பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுத் தண்ணீர் உவர்ப்பாக மாறியுள்ளது. இதே போல் வலது கரை பகுதியில் பட்டியமேடு பகுதி வரை இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த இரு கரையோர கிராமங்களுக்கும் மிகப்பெரிய நீர் ஆதாரமாக இருந்த கொள்ளிடம் ஆற்று தண்ணீர் உவர் நீராக மாறியதால் இக்கிராமங்களின் போர்வெல்களில் வரும் தண்ணீரும் சுவை மாறியுள்ளது. நல்ல தண்ணீருக்காக இப்பகுதி கிராம மக்கள் அலைவதை காண முடிகிறது. இந்த உவர் நீரால் பயிர்கள் செழித்து வளராமல், சரியான மகசூலை விவசாயிகள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உவர் நீர் பிரச்சினையைத் தீர்க்க, கொள்ளிடம் ஆற்றில் சிதம்பரம் வட்டம் கீழத்திருக்கழிப்பாளை கிராமத்துக்கும் மாயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் அளக்குடி கிராமத்துக்கும் இடையே தடுப்பணை கட்ட வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கடந்த 15 ஆண்டுகளாக தொடர் கோரிக்கை வைத்து மனு அளித்தும் போராட்டங்கள் நடத்தியும் வருகின்றனர்.
இருமாவட்ட நீர் வளத்துறை உயர் அதிகாரிகள் பல முறை இந்தப் பகுதியை பார்வையிட்டு ஆய்வு நடத்தி, இந்தப் பகுதியில் தடுப்பணை அமைத்தால் ஆற்று நீரோடு கடல் நீர் கலப்பது பெருமளவில் கட்டுக்குள் வரும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். அதற்கான இடமாக, கொள்ளிடம் ஆற்றில் கீழத்திருக்கழிப்பாளை - அளக்குடி பகுதியை தேர்வு செய்திருக்கின்றனர். இந்த இடத்தில் தடுப்பணை கட்ட உரிய நடவடிக்கை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் கடலூர் மாவட்ட கொள்ளிட கரையோர கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் உள்ளனர்.
இதுகுறித்து சிதம்பரம் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது,“கொள்ளிடம் ஆற்றில் கீழத்திருக்கழிப்பாளை- அளக்குடி பகுதியில் 950 மீட்டர் நீளத்துக்கு தடுப்பணை கட்டிட தஞ்சாவூர் கோட்ட நீர்வளத்துறையின் திட்டம் மற்றும் உருவாக்கம் பிரிவில் ரூ 705 கோடிக்கு கருத்துரு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர். நீர்வளத்துறை அதிகாரிகள் குறிப்பிடுவது போல் அனுப்பப்பட்டுள்ள கருத்துருவை, அரசு ஏற்று இதற்கான பணிகள் விரைவாக நடக்க வேண்டும் என்பதே இந்த கரையோர கிராம மக்களின் விருப்பம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT