Published : 24 Nov 2023 01:20 PM
Last Updated : 24 Nov 2023 01:20 PM

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திருக்கோயில்கள் சார்பில் 1,100 திருமணங்கள் நிறைவு: தமிழக அரசு

சென்னை: திருக்கோயில்கள் சார்பில் 1,100 மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்வை நிறைவு செய்திடும் விதமாக, இரண்டு மணமக்களுக்கான திருமணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று இன்று நடத்தி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.24) சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 1,100 மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்வை நிறைவு செய்திடும் விதமாக, இரண்டு மணமக்களுக்கான திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.

திருக்கோயில்கள் சார்பில் 1,100 மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைத்தல்: 2022-2023 ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், “ஒரு இணை ஆணையர் மண்டலத்துக்கு 25 இணைகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 இணைகளுக்கு திருக்கோயில்களில் திருமணங்கள் நடத்தப்படும். இதற்கான செலவினத்தைத் திருக்கோயில்களே ஏற்கும்“ என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் 4.12.2022 அன்று சென்னை இணை ஆணையர் மண்டலத்துக்குட்பட்ட திருக்கோயில்கள் சார்பில் 25 மணமக்களுக்கு தமிழக முதல்வர் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மொத்தம் 500 மணமக்களுக்கு திருக்கோயில்கள் சார்பில் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. மேலும், திருக்கோயில்கள் மூலம் நடத்தப்படும் திருமணத்துக்கு அனுமதிக்கப்பட்ட திட்டச் செலவினத் தொகையை 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.

2023-2024 ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், “பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் பொன் தாலி உட்பட ரூ.50,000 மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கி திருமண விழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 500 இணைகளுக்கு திருக்கோயில் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இவ்வாண்டு கூடுதலாக மேலும் 100 இணைகளைச் சேர்த்து ஒரு மண்டலத்துக்கு 30 இணைகள் வீதம் 600 இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக திருமண விழா நடத்தி வைக்கப்படும்” என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, முதற்கட்டமாக தமிழக முதல்வர் 7.7.2023 அன்று சென்னை, கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், 34 மணமக்களுக்கு திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து சென்னையில் நீர்வளத்துறை அமைச்சர் தலைமையிலும், பிற மாவட்டங்களிலும் திருக்கோயில்கள் சார்பில் திருமணங்கள் நடத்தப்பட்டன.

இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 2022 – 2023 ஆம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட 500 திருமணங்களும், 2023 – 2024 ஆம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட 600 திருமணங்களில் 564 திருமணங்களும், ஆகமொத்தம் 1,064 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.இன்றைய தினம் திருக்கோயில்கள் சார்பில் பிற மாவட்டங்களில் 34 மணமக்களுக்கும், சென்னையில் தமிழக முதல்வர் தலைமையில் 2 மணமக்களுக்கும் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு மொத்தம் 1,100 திருமணங்கள் நிறைவு பெற்றுள்ளன.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் த.வேலு, ஜெ. கருணாநிதி, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், ந.திருமகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x