Published : 23 Nov 2023 09:38 PM
Last Updated : 23 Nov 2023 09:38 PM
திருவண்ணாமலை: “திருவண்ணாமலை தேரோட்டத்தின்போது மின் கசிவினால் ஏற்பட்ட விபத்து, திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை குறிப்பாக, அறநிலையத் துறை, மின்சாரத் துறை மற்றும் காவல் நுண்ணறிவுப் பிரிவு ஆகியவற்றின் தோல்வியையே காட்டுகிறது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “இன்று மாலை (23.11.2023), பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருத்தேர் பவனியின் போது ஏற்பட்ட மின் கசிவால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாகவும், 8 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். திருவண்ணாமலை வரலாற்றில் திருத்தேரோட்டத்தின் போது இதுவரை மின் கசிவு ஏற்பட்டு பக்தர்கள் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வந்ததில்லை.
பொதுவாக, இதுபோன்ற திருத்தேர் பவனியின் போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, போதிய முன்னெச்சரிக்கையுடன் தேரோட்டம் நடைபெறும். ஆனால், இன்று நடந்த மின் கசிவினால் ஏற்பட்ட இந்த விபத்து, திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை குறிப்பாக, அறநிலையத் துறை, மின்சாரத் துறை மற்றும் காவல் நுண்ணறிவுப் பிரிவு ஆகியவற்றின் தோல்வியையே காட்டுகிறது.
ஏற்கெனவே, திமுக அரசின் 30 மாத கால ஆட்சியில், தேரோட்டம் மற்றும் திருக்கோயில் விழாக்களின்போது விபத்துகள் ஏற்பட்ட சமயங்களில் நான், இனிவரும் காலங்களில் தேரோட்டங்களின் போதும், திருக்கோயில் விழாக்களின் போதும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறநிலையத் துறையை வலியுறுத்தி இருந்தேன்.
ஆனால், இன்று நடந்த நிகழ்வைப் பார்க்கும்போது, திருவண்ணாமலை திருத்தேரோட்டப் பாதையில் திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இனியாவது, திமுக அரசு விழித்துக்கொண்டு இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க வலியுறுத்துகிறேன். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உரிய சிகிச்சைகளை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT