Published : 23 Nov 2023 09:05 PM
Last Updated : 23 Nov 2023 09:05 PM
சென்னை: பிரணவ் நகைக் கடை பண மோசடி வழக்கில் அக்கடையின் விளம்பரங்களில் நடித்த நடிகர் பிரகாஷ்ராஜ் நேரில் ஆஜராக கோரி அவருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
திருச்சி, மதுரை, சென்னை, கும்பகோணம், நாகர்கோவில், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் பிரணவ் என்ற பெயரில் நகைக் கடை இயங்கி வந்தது. இங்கு பல்வேறு சிறு சேமிப்பு மற்றும் முதலீடு திட்டங்களில் அதிகளவில் போனஸ் தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது. இதை நம்பி முதலீடு செய்த பலரும், முதிர்வு தொகையை வழங்குமாறு கேட்டபோது அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த அக்.16-ம் தேதி முதல் நகைக் கடை திறக்கப்படாமல் பூட்டிக் கிடப்பதாகவும், முதலீடு செய்தவர்களை ஏமாற்றி விட்டு நகைக்கடை உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டதாகவும் திருச்சி பொருளாதார குற்றப் பிரிவு காவல் நிலையத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, நகைக்கடை உரிமையாளர்கள் மதன், அவரது மனைவி கார்த்திகா உள்ளிட்டோர் மீது பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் அக்.18-ம் தேதி மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர், இது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள 11 இடங்களில் இந்த நகைக்கடையின் கிளைகளில் போலீஸார் சோதனை நடத்தி, பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும்ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும், திருச்சி கிளை மேலாளர் நாராயணன் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால் நகைக் கடை உரிமையாளர்கள் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். நகைக் கடை உரிமையாளர்களான மதன், கார்த்திகா ஆகியோர் வெளி நாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க, அவர்களை தேடப்படும் குற்றவாளியாக காவல் துறை அறிவித்துள்ளது.
இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்து, பிரணவ் ஜூவல்லர்ஸ் தொடர்பான இடங்களில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் ரூ.100 கோடி பொன்சி திட்ட முறைகேடு தொடர்பாக இந்தக்கடையின் விளம்பர தூதுவராக உள்ள பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT