Published : 23 Nov 2023 08:28 PM
Last Updated : 23 Nov 2023 08:28 PM

தீபத் திருவிழா | தி.மலை அண்ணாமலையார் கோயிலில் மகா தேரோட்டம் கோலாகலம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி நடைபெற்ற மகா தேரோட்டத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடியவாறு செல்லும் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையாரின் திருத்தேர். | படங்கள்: சி.வெங்கடாஜலபதி.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையாருக்கு அரோகரா எனும் முழக்கத்துடன் மகா தேரோட்டம் இன்று (நவம்பர் 23) கோலாகலமாக நடைபெற்றது.

பஞ்சபூத திருத்தலங்களில் 'அக்னி' திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. காவல் தெய்வமான துர்க்கை அம்மன், பிடாரி அம்மன் மற்றும் விநாயகர் உற்சவம் நிறைவு பெற்றதும், மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கடந்த 17-ம் தேதி காலை கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து, பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. காலை மற்றும் இரவு நேரத்தில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் மாட வீதியுலா வந்தனர். 6-ம் நாள் உற்சவமான நேற்று இரவு வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி மகா தேரோட்டதில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய விநாயகரின் திருத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்.

இதைத்தொடர்ந்து பத்து நாள் உற்சவத்தின் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் இன்று (நவம்பர் 23-ம் தேதி) நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில், திருத்தேரில் விநாயகர் எழுந்தருளினார். பின்னர் காலை 7.41 மணியளவில் விநாயகர் திருத்தேர் புறப்பாடு தொடங்கியது. பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மாட வீதியில் வலம் வந்து, காலை 11.39 மணியளவில் நிலையை வந்தடைந்தது. பின்னர், வள்ளி தெய்வானை சமேத முருகரின் திருத்தேர், முற்பகல் 11.55 மணியளவில் புறப்பட்டது. பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இத்திருத்தேர் 4.30 மணியளவில் நிலையை வந்தடைந்தது.

இதையடுத்து, சிவ பக்தர்கள் மற்றும் ஆன்மிக அன்பர்கள் அனைவரும் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, பெரியத் தேர் என அழைக்கப்படும் திருத்தேரில், சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளினார். பின்னர், திருத்தேருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து மாலை 5.06 மணியளவில் அண்ணாமலையார் திருத்தேர் புறப்பட்டது. மாட வீதியில் மெல்ல மெல்ல அசைந்தாடியபடி சென்றபோது, ''ஓம் நமசிவாய, அண்ணாமலையாருக்கு அரோகரா'' என பக்தர்களின் முழக்கம், விண்ணைப் பிளந்தது. மாட வீதியில் வலம் வந்த பெரியத் தேரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வணங்கினர். பெரியத் தேர், நிலையை வந்தடைய நீண்ட நேரமானது.

இதன்பிறகு, பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழக்கும் பராசக்தி அம்மன் திருத்தேர் மற்றும் சண்டிகேஸ்வரர் திருத்தேர் பவனி நடைபெற்றது. ஒவ்வொரு திருத்தேரும் நிலைக்கு வந்ததும், அடுத்த திருத்தேரின் புறப்பாடு இருந்தது. காலையில் தொடங்கிய மகா தேரோட்டம், நள்ளிரவை கடந்தும் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஒவ்வொரு திருத்தேர் பவனி வரும்போது, 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறை வாகனம் பின்தொடர்ந்து சென்றன. கார்த்திகைத் தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, அண்ணாமலையார் கோயில் மூலவர் சன்னதியில் வரும் 26-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளன.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி மகா தேரோட்டத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வள்ளி தெய்வானை சமேத முருகரின் திருத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்.

மின்சாரம் தாக்கி 25 பக்தர்கள் காயம்: அண்ணாமலை திருத்தேர் புறப்பட்டு நகர்ந்தது. நகர குற்றப்பிரிவு காவல் நிலையம் எதிரே உள்ள கடைகளில் இருந்த பக்தர்கள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் அலறியடித்து, மாடியில் இருந்து சிலர் குதித்தனர். முதல் மாடியில் இருந்த ஒருவர், தனது குழந்தையை கீழே இருந்தவரிடம் தூக்கி வீசினார். பலர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பழக்கடை மற்றும் துணிக்கடைகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட சுமார் 25 பக்தர்களில் சிலர் மட்டும், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 20 நிமிடம் தேரோட்டம் தடைப்பட்டன. இதனால், 30 நிமிடங்கள் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x