Published : 23 Nov 2023 06:13 PM
Last Updated : 23 Nov 2023 06:13 PM
மதுரை: 96 மாத அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மதுரை மண்டல அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் இன்று மதுரை புறவழிச்சாலையிலுள்ள போக்குவரத்து தலைமையகம் முன்பு நடைபெற்றது. இதில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய முழக்கப் போராட்டம் 5 மணிக்கு முடிவடைந்தது. இதில், போக்குவரத்துக் கழகங்களில் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத்தை அரசு வழங்க வேண்டும். ஓய்வு பெற்றோருக்கு 96 மாத அகவிலைப்படி உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும். 01.04.2003-க்குப்பின் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 15வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக துவங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதற்கு சிஐடியு மண்டலத் தலைவர் பி.எம்.அழகர்சாமி தலைமை வகித்தார். அனைத்து சங்க பொதுச் செயலாளர்கள் சிஐடியு ஏ.கனகசுந்தர், ஏஐடியுசி எம்.நந்தாசிங், விஎன்ஆர் வெள்ளத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். டிடிஎஸ்எஃப் இணைப் பொதுச் செயலாளர் எஸ்.சம்பத் தொடங்கி வைத்தார்.
மதுரை எம்.பி சு.வெங்கடேசன், துணை மேயர் டி.நாகராஜன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். இதில் ஓய்வுபெற்றோர் நலச்சங்கங்களின் பொதுச் செயலாளர்கள் ஆர்.வாசுதேவன், ஏ.சப்பாணி, நாச்சிமுத்து, வி.இளங்கோ உள்பட பலர் பலர் பேசினர். சிஐடியு மாநில சம்மேளன துணைத் தலைவர் வீ.பிச்சை நிறைவுரை ஆற்றினார். முடிவில், என்.மகாலிங்கம் நன்றி கூறினார். இதில் மதுரை மண்டலத்திலுள்ள அனைத்து தொழிற்சங்கங்கள், ஓய்வுபெற்றோர் நலச்சங்கங்களைச் சேர்ந்த சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT