Published : 23 Nov 2023 04:43 PM
Last Updated : 23 Nov 2023 04:43 PM
கோவை: கோவை பீளமேடு ஃபன்மால் பகுதியில் இருந்து எல்லைத்தோட்டம் சாலை வழியாக பீளமேடு பகுதிக்கு திட்டச் சாலை ஏற்படுத்த வேண்டும் என வாகன ஒட்டிகள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர். கோவை மாநகரில் உள்ள முக்கிய பகுதிகளில் பீளமேடு முதன்மையானதாகும். அவிநாசி சாலையை மையப்படுத்தி அமைந்துள்ள பீளமேடு பகுதியில் ஏராளமான எண்ணிக்கையில் பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக மையங்கள் அமைந்துள்ளன. காந்திபுரம், உக்கடம் போன்ற பகுதிகளில் இருந்து அவிநாசி சாலை வழியாக திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சென்னை, பெங்களூரு, திருப்பதி, புதுச்சேரி உள்ளிட்ட முக்கிய தொலைதூரப் பகுதிகளுக்கு செல்வதற்கு பீளமேடு பகுதி முக்கிய வழித்தடமாக உள்ளது.
ஆறுவழிச் சாலையாக உள்ள பீளமேடு பகுதியில் தற்போது போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்டப் பாலம் கட்டும் பணி தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், வாகன ஓட்டிகள் அதிகம் பயன்படுத்தும் அவிநாசி சாலை பீளமேடு ஃபன்மால் பகுதியில் இருந்து பீளமேடு எல்லைத் தோட்டம் சாலையை மையப்படுத்தி திட்டச்சாலை ஏற்படுத்தித் தர பொதுமக்கள், சமூக செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பீளமேடு பகுதியைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் ராஜ்குமார், விளாங்குறிச்சி சாலையைச் சேர்ந்த சரவணன் ஆகியோர்கூறியதாவது: பீளமேடு ஃபன்மால் சாலைக்கு எதிரே பீளமேடு காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்தை ஒட்டியவாறு ஒரு மண் சாலை செல்கிறது. அவிநாசி சாலை பீளமேட்டில் இருந்து எல்லைத்தோட்டம் சாலைக்கு செல்லும் இந்த சாலை, சுமார் 30 அடி முதல் 40 அடி வரை அகலம் கொண்டதாக அமைந்துள்ளது. அவிநாசி சாலை பீளமேட்டில் இருந்து இந்த சாலை வழியாகச் சென்றால், சுமார் 700 மீட்டர் தூரத்தில் ஒரு வளைவு வருகிறது. அதன் பின்னர், தார் சாலை அமைந்துள்ளது. அதிலிருந்து சுமார் 500 மீட்டர் தூரம் சென்றால் எல்லைத் தோட்டம் சாலையை தொடலாம்.
அவிநாசி சாலையில் இருந்து எல்லைத் தோட்டம் சாலை வரை தோராயமாக 1.30 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். எல்லைத் தோட்டம் சாலையை அடைந்து ரயில்வே சுரங்கப்பாதை வழியாக செங்காளியப்பன் நகருக்கு சென்று, காந்திமாநகர் சந்திப்பை அடைந்து எப்சிஐ குடோன் சாலை வழியாக சத்தி சாலை சரவணம்பட்டிக்கு செல்லலாம். அதேபோல், செங்காளியப்பன் நகரில் இருந்து வலதுபுறம் திரும்பினால் தண்ணீர் பந்தல் சாலை சந்திப்பு வழியாக பீளமேடு ஹோப்காலேஜ் சந்திப்பையும், டைடல் பார்க் சாலையையும், கொடிசியா சாலை வழியாக சென்றால் விமான நிலைய சந்திப்பையும் அடையலாம்.
அதேபோல், செங்காளியப்பன் நகரில் இருந்துதண்ணீர் பந்தல் சாலையின் எதிர்ப்புற சாலை வழியாகசேரன்மாநகரை அடைந்து சத்திசாலைக்கு செல்லலாம். மேற்கண்ட பகுதிகளுக்கு அவிநாசி சாலை பீளமேட்டில் இருந்து பிரதான சாலைகள் வழியாக சென்றால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி செல்ல வேண்டிய பகுதிகளுக்கு செல்ல நேரமாகும். பீளமேட்டில் இருந்து இந்த சாலை வழியாகச் சென்றால், செல்ல வேண்டிய பகுதிகளுக்கு விரைவாக சென்று வரலாம். இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
எனவே, இந்த சாலையை மையப்படுத்தி திட்டச்சாலை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்ட சாலை ஏற்படுத்தினால் மண் சாலை தரமான சாலையாக அமைக்கப்படும். தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தப்படும். எனவே,அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி பீளமேடு காவல் நிலையம் அருகேயுள்ள சாலையை திட்டச் சாலையாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT