Published : 23 Nov 2023 03:34 PM
Last Updated : 23 Nov 2023 03:34 PM
வேலூர்: வேலூர் மாநகராட்சியில் நடைபெற்ற சாதாரண கூட்டத்தில் ‘முதலாவது மண்டல கூட்டம் நடத்தி ஓராண்டாகிறது. மண்டலத்துக்கு நிதி ஒதுக்கீடு, அதிகாரம் இல்லாத தலைவர் பதவியை அமைச்சரிடம் கூறி ராஜினமா செய்கிறேன்’ என மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. வேலூர் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மாமன்ற கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. மேயர் சுஜாதா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆணையர் ஜானகி ரவீந்திரன், துணை மேயர் சுனில்குமார், கண்காணிப்பு பொறியாளர் முஹ்மது சபியுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கூட்டம் தொடங்கியதும் மேயர் சுஜாதா ஆனந்தகுமார், ‘வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை சாலை நுழைவு வாயிலில் வேலூர் சட்டப்பேரவை உறுப்பினரின் நிதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நினைவு வளைவு அமைக்க அரசின் அனுமதி கோருவது, வேலூர் கோட்டை பெரியார் பூங்காவை மாநகராட்சி வசம் தொல்லியல் துறை ஒப்படைக்க வேண்டும்’ என்ற தீர்மானத்தை கொண்டுவந்தார். தொடர்ந்து, கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் பின்வருமாறு:
அன்பு: எங்கள் குறைகளை தெரிவிக்க மாதத்துக்கு ஒருமுறை யாவது மாமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும். மக்களிடம் சென்று குறைகளை கேட்க வேண்டும் என முதல்வர் கூறுகிறார். ஆனால், எங்களால் வார்டுகளில் சென்று மக்களை சந்திக்க முடியவில்லை. எனது வார்டில் கடந்த 18 மாதங்களாக ஒரு கால்வாய் கூட கட்டவில்லை. ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்காததால் பணி செய்ய மறுக்கின்றனர். 'பொக்லைன்' வாகனம் உள்ளது. ஆனால், அதற்கான ஓட்டுநர் இல்லை. அந்த பணத்தில் மக்கள் திட்டங்களை செய்திருக்கலாம். தெருவிளக்கு வரும் என்றீர்கள் இதுவரை வரவில்லை.
ஆணையர்: 1,000 தெருவிளக்குகள் வந்துள்ளன. அதற்குரிய உபகரணங்கள் மட்டும் வரவேண்டிஉள்ளது. அந்த ஒப்பந்ததாரருக்கு ஏற்கெனவே மாநகராட்சி பணம் பாக்கி வைத்திருப்பதாக கூறுகிறார்கள். அதை எப்படி கொடுப்பது என விரைவில் முடிவெடுக்கப்படும். கால்வாய் பணிக்கு அடுத்த ஆண்டுதான் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி நிதி வாங்க வேண்டும்.
ரமேஷ்: முதலாவது மண்டல கூட்டம் நடத்துவதே இல்லை. மண்டல குழு தலைவர் உள்ளாரா? இல்லையா? என்றே தெரியவில்லை. 3 மாதங்களுக்கு ஒருமுறைதான் மன்ற கூட்டம் நடைபெறுகிறது. பிறகு எப்படி மக்கள் குறைகளை தெரிவிப்பது.
புஷ்பலதா: முதலாவது மண்டலத்தில் சாலை போடுவதற்கு சென்றால் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு, காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் இணைப்பு வழங்கவில்லை. ஒப்பந்ததாரர் என்ன செய்துகொண்டிருக்கிறார். அப்படி இருக்கும்போது எப்படி சாலை அமைக்க முடியும். முதலாவது மண்டல குழு தலைவராக இருக்கும் நான் மண்டல கூட்டத்தை நடத்தி ஓராண்டாகிறது. மண்டலத்துக்கு என தனியாக நிதி ஒதுக்கிக் கொடுங்கள். ஒரு கல்வெர்ட், குழாய் அமைக்கக்கூட எனக்கு அதிகாரம் இல்லை என்றால் எதற்காக, மண்டல குழு தலைவராக இருப்பது. பேசாமல் அமைச்சரிடம் கூறி ராஜினாமா செய்துவிட்டு போகிறேன். (இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது)
எழிலரசன்: 47-வது வார்டு அம்மணாங்குட்டைக்கு செல்லும் சாலையில் ஜல்லி கற்கள் கொட்டி ஓராண்டாகிறது. இதுவரை சாலை அமைக்காததால் மக்கள் அவதிப்படுகின்றனர். அந்த பகுதியில் பொது மக்களுக்கான மயானம் உள்ளது. இறுதிகால ஊர்வலம் நல்ல முறையில் நடக்க சாலை அமைக்க வேண்டும்.மாநகராட்சி 'பொக்லைன்' இயந்திரத்தை பயன்படுத்த நாங்கள் தான் டீசலுக்கு செலவு செய்ய வேண்டிஉள்ளது. 'பொக்லைன்' இயந்திரங்களுக்கு டீசல் போட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
ஆணையர்: சாலை அமைப்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
சுமதி: எனது வார்டில் பூங்கா புதர்மண்டி சீரழிந்துள்ளது. அதை சரி செய்ய வேண்டும். மாநகராட்சியில் உள்ள அனைத்து பூங்காக்களையும் சீரமைக்க வேண்டும்.
ஆணையர்: குடியிருப்போர் நலச் சங்கத்தினர், தன்னார்வலர்கள் பூங் காக்களை பராமரிக்க விருப்பம் தெரிவித்தால் அவர்களிடம் வழங்கலாம்.
காஞ்சனா: 17-வது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஏழை மக்கள் பயன்பாட்டுக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
மேயர்: தொல்லியல் துறை பாதுகாப்பு எல்லைக்குள் வருவதால் வேறு இடத்தில் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்படும்.
தபசும் பர்வீன்: கஸ்பாவில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் உயரம் குறைவாக இருப்பதால் கடந்த தீபாவளியன்று பாலத்தில் இருந்து கீழே விழுந்த 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். எனவே, பாலத்துக்கு செல்லும் சாலையில் வேகத்தடுப்பு அமைக்க வேண்டும் அல்லது பக்கவாட்டு சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும்.
மேயர்: வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு நடைபெற்ற கூட்டத்தில் வேலூர் தெற்கு காவல் நிலையம் எதிரே மகாராணி விக்டோரியா நினைவுத்தூண் அருகில் ‘நம்ம வேலூர்’ என்ற செல்பி பாயின்ட் ரூ.14.90 லட்சத்தில் அமைப்பது உள்ளிட்ட 107 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT