Published : 23 Nov 2023 01:12 PM
Last Updated : 23 Nov 2023 01:12 PM

சென்னை ஓஎம்ஆர், இந்திரா நகர் சந்திப்பில் ரூ.18.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 'U' வடிவ மேம்பாலம் திறப்பு

'U' வடிவ மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை: சென்னை, ராஜீவ் காந்தி சாலை, இந்திரா நகர் சந்திப்பில் ரூ.18.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 'U' வடிவ மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இப்பாலத்தில் சோழிங்கநல்லூர் திசையில் இருந்து வரும் வாகனங்கள் இந்திரா நகர் வழியாக அடையாறு மற்றும் திருவான்மியூர் ஆகிய பகுதிகளுக்கு போக்குவரத்து நெரிசலின்றி விரைந்து செல்ல இயலும்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.23) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை, ராஜீவ் காந்தி சாலை (OMR), இந்திரா நகர் சந்திப்பில் 18.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 'U' வடிவ மேம்பாலத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

பொருளாதாரத்தின் அங்கங்களான விவசாயம், தொழில், வணிகம், சுற்றுலா, போன்ற துறைகளின் மேம்பாட்டுக்கு சாலை உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில் புதிய சாலைகள் மற்றும் பாலங்கள் அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல், கிராமப்புறங்களுக்கு இணைப்புச் சாலைகள் அமைத்தல் போன்ற முக்கியப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம், தமிழகஅரசு, நெடுஞ்சாலைத் துறை வாயிலாக தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை சிறந்த முறையில் உருவாக்கி, பராமரித்து வருகிறது.

இந்திரா நகர் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள 'U' வடிவ மேம்பாலத்தை திறந்து வைத்தல்: ராஜீவ் காந்தி சாலையில் (ஓஎம்ஆர்), இந்திரா நகர் சந்திப்பு மற்றும் டைடல் பார்க் சந்திப்பில் அமைந்துள்ள இரண்டு போக்குவரத்து சமிக்ஞைகளில் தற்போது வாகனங்கள் சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணும் வகையில், மேற்கண்ட இந்திரா நகர் சந்திப்பு மற்றும் டைடல் பார்க் சந்திப்பு ஆகிய இரண்டு சந்திப்புகளிலும் 'U' வடிவ மேம்பாலங்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, இந்திரா நகர் மற்றும் டைடல் பார்க் சந்திப்புகளில் 'U' வடிவ மேம்பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து உள் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ.108.13 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இப்பணிகளுள் ஒன்றான 18.15 கோடி செலவில் இந்திரா நகர் 'U' வடிவ மேம்பாலப் பணிகள் முழுவதும் தற்போது முடிக்கப்பட்டு, தமிழக முதல்வரால் இன்று பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்திரா நகர் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள 237 மீட்டர் நீளமுள்ள இப்பாலம், 12.5 மீட்டர் நீளமுள்ள 19 கண்களை கொண்டதாகும். ராஜீவ் காந்தி சாலையின் வலது புறத்தில் இந்த பாலத்தின் ஏறு சாய்தளம் 120 மீட்டர் நீளத்துக்கும், இடது புறத்தில் இறங்கு சாய்தளம் 120 மீட்டர் நீளத்துக்கும் அமைக்கப்பட்டுள்ளது. இந்திரா நகர் “U” வடிவ மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படுவதால், சோழிங்கநல்லூர் திசையில் இருந்து வரும் வாகனங்கள் இந்திரா நகர் மேம்பாலம் வழியாக ஏறி “U” திருப்பம் எடுத்து, இந்திரா நகர் வழியாக அடையாறு மற்றும் திருவான்மியூர் ஆகிய பகுதிகளுக்கு போக்குவரத்து நெரிசலின்றி விரைந்து செல்ல இயலும்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் எஸ். பிரபாகர், செயல் இயக்குநர் எம். விஜயா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திரா நகர் சந்திப்பு பகுதியிலிருந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். அரவிந்த் ரமேஷ், கே. கணபதி, ஜெ.எம்.எச். அசன் மவுலானா, ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு. மகேஷ் குமார், மண்டலக் குழுத் தலைவர் துரைராஜ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட முதன்மை பொது மேலாளர் மனோகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x