Published : 23 Nov 2023 12:46 PM
Last Updated : 23 Nov 2023 12:46 PM

மக்களுக்கு அனைத்துவகை பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்

சென்னை: மக்களுக்கு அனைத்து வகையான பால் பாக்கெட்டுகளையும் விற்பனை செய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: ''பொதுமக்கள் அதிகளவு விரும்பி பருகும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனையை திடீரென நிறுத்த முடிவு செய்திருக்கும் ஆவின் நிர்வாகத்தின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. பொதுமக்கள் விரும்பும் அனைத்து வகையான பால் பாக்கெட்டுகளையும் விற்பனை செய்வதை உறுதி செய்யுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

குறைந்து வரும் பால் கொள்முதல், ஊழல், முறைகேடு என பல புகார்களில் சிக்கித் தவிக்கும் ஆவின் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை போக்க, 4.5 சதவிகித கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனையை நிறுத்திவிட்டு, 3.5 சதவிகித கொழுப்புச் சத்துள்ள ஊதா நிற பால் பாக்கெட்டை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பது போல குறைத்துவிட்டு, பால்பொருட்களின் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியிருக்கும் திமுக அரசு, பொதுமக்களின் நீண்டகால பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளை திடீரென நிறுத்துவதன் மூலம் அதனை பருகிவந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வழிவகை செய்யும் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே, நஷ்டத்தில் இயங்கும் ஆவின் நிர்வாகத்தின் வருவாயை பெருக்க மாற்று ஏற்பாடுகளை செய்வதோடு, பொதுமக்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆரஞ்சு, நீலம், பச்சை, ஊதா ஆகிய நான்கு விதமான பால் பாக்கெட்டுகளை ஆவின் நிர்வாகம் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.'' இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x