Published : 02 Jan 2018 08:05 AM
Last Updated : 02 Jan 2018 08:05 AM

கட்சியின் பெயர், கொடி, நிர்வாகிகள் நியமனம் குறித்து திடீர் ஆலோசனை: ரஜினிகாந்த் தனி இணையதளம் தொடங்கினார் - ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் மாற்றத்தை விரும்பும் அனைவரும் உறுப்பினராகச் சேர அழைப்பு

அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், கட்சியின் பெயர், கொடி மற்றும் நிர்வாகிகள் நியமனம் குறித்து திடீர் ஆலோசனை நடத்தினார். புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்காக தனி இணைய தளத்தையும் தொடங்கியுள்ளார்.

சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்த ரசிகர்கள் சந்திப்பின்போது, நடிகர் ரஜினிகாந்த் ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு புதிய கட்சி தொடங்கி, 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவேன்’ என அறிவித்தார். முதல்கட்டமாக, ரசிகர் மன்றங்களை இணைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், மன்றங்கள் இணைப்பு, புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக தனி இணையதளம் ஒன்றை ரஜினி தொடங்கியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள். என் அரசியல் பிரவேசத்தை வரவேற்ற அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பதிவு செய்யப்பட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினர்களையும் பதிவு செய்யப்படாத மன்ற உறுப்பினர்களையும் தமிழகத்தில் நல்ல அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கும் மக்களையும் ஒருங்கிணைந்து ஒரு குடைக்குள் கொண்டுவர வேண்டும்.

அதற்கு www.rajinimandram.org என்ற இணையத்தை உருவாக்கி இருக்கிறேன். அதில் நீங்கள் உங்களது பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றை பதிவு செய்து உறுப்பினராகலாம். தமிழகத்தில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவோம். வாழ்க தமிழ் மக்கள். வளர்க தமிழ்நாடு. இவ்வாறு நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ பதிவில் ரஜினி யின் பின்புறம் வெள்ளைத் தாமரையில் பாபா முத்திரையுடன் ஒரு படம் உள்ளது. அதுதான் ரஜினி ஆரம்பிக்க உள்ள கட்சியின் சின்னமாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்ற தொரு பேனரின் முன் னால் நின்றுதான் ரசிகர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

ரஜினி தொடங்கியுள்ள www.rajinimandram.org இணையதளத்துக்குள் சென்றால், முதலில் பதிவு செய்யச் சொல்கிறது. அவ்வாறு தங்களுடைய மொபைல் எண்ணைக் கொடுத்து பதிவு செய்யும்போது, நமது மொபைல் எண்ணுக்கு பாஸ்வேர்டு வருகிறது. பாஸ்வேர்டு கொடுத்து உள்ளே சென்றவுடன் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை பூர்த்தி செய்யச் சொல்கிறார்கள். அதனை செய்தவுடன் உறுப்பினராகச் சேர்ந்துவிடலாம். உறுப்பினர் சேர்க்கையில் வாக்காளர் அடையாள அட்டை எண், பணி, படிப்பு, வருட சம்பளம் உள்ளிட்ட விவரங்களையும் நிரப்ப வேண்டும். இணையதளம், செல்போன் செயலி மட்டுமன்றி புதிதாக ரஜினி மன்றம் என்ற பெயரில் யூ-டியூப்பிலும் தனியாக கணக்கு ஒன்றைத் தொடங்கியுள்ளனர். அதில் ரஜினியின் அரசியல் வருகை குறித்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும், @officialairrm என்ற பெயரில் தனியாக ட்விட்டர் கணக்கும் தொடங்கப்பட்டுள்ளது.

இணையதளம், செயலி இரண்டுக்குமான அறிவிப்பு வந்தவுடன், பலரும் அதன் விவரங்களை அறிந்துகொள்ள அணுகியதால் சில மணித்துளிகளில் தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டது. அனைத்துமே உடனுக்குடன் சரி செய்யப்பட்டன. இந்த சிக்கல் தொடர்பாக அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் ட்விட்டர் பதிவில் ‘எங்களது அனைத்து ஆதரவாளர்களும் பதிவு செய்துகொள்ள ஏதுவான ஒரு அமைப்பை, ஆண்டவனின் ஆசியோடு ஆரம்பித்தோம். அதிகமானோர் பதிவு செய்வதால் பலருக்கு தாமதமாக்கியிருக்கிறது. தயவுசெய்து சற்று பொறுமையாக இருங்கள். இன்னும் சில மணி நேரங்களில் சரியாகும். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இதைப் பகிருங்கள்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, புத்தாண்டை முன்னிட்டு நேற்று ரஜினிகாந்த் தனது வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களை சந்தித்தார். அதைத் தொடர்ந்து மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, புதிதாக தொடங்கவுள்ள கட்சியின் பெயர், கொடி அமைப்பு, நிர்வாகிகள் நியமனம் உட்பட பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படு கிறது.

இது தொடர்பாக மன்ற நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தபோது, "இது வழக்கமாக நடக்கும் ஆலோசனைதான். புத்தாண்டை முன்னிட்டு ரஜினி சாரை சந்தித்துப் பேசினோம். இம்முறை அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்துவிட்டதால் பெரிது படுத்திவிட்டார்கள். ரஜினி மன்றத் தில் உறுப்பினர் சேர்க்கை தொடங்குகிறோம். அனைத்தும் நல்லபடியாக நடக்கும் என்று ரஜினி சார் கூறினார்’’ என்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x