Published : 23 Nov 2023 04:04 AM
Last Updated : 23 Nov 2023 04:04 AM

தமிழக அரசை கண்டித்து நவ.30-ல் ஆர்ப்பாட்டம்: காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்.படம்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர்: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, விவசாயத்தை தமிழக அரசு அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டி, தமிழக அரசைக் கண்டித்து நவ.30-ம்தேதி தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றஅக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பெ.மணியரசன் கூறியது: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மேல்மா சிப்காட்திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 7 விவசாயிகளை, குண்டர் சட்டத்தில் தமிழக அரசு கைது செய்தது கண்டிக்கத்தக்கது. இவர்கள் தவிர, போராட்டங்களில் ஈடுபட்ட 20 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களை ஜாமீனில் விடுவிக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது.

தமிழக அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, தமிழர்களின் பாரம்பரியமான விவசாயத்தை அழிக்க நினைக்கிறது. தேர்தலின் போது, ‘‘விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில், விவசாயிகளின் ஒப்புதலின்றி விளை நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவது தடுக்கப்பட்டு விளை நிலங்கள் பாதுகாக்கப்படும்’’ என்று அளித்த வாக்குறுதிக்கு மாறாக தற்போது திமுக-வினர் செயல்படுகின்றனர். வேளாண்மையை அழித்து, தொழிற்சாலைகளைப் பெருக்குவது கிராமங்களை அழிப்பதாகும். மேலும், மிகை தொழிற்சாலைப் பெருக்கம், மண்ணையும் மற்றும் நீரையும் நஞ்சாக்கும்.

மனிதர்கள் வாழ தகுதியற்ற சூழலை ஏற்படுத்தும். எனவே, தமிழக அரசு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை நீக்க வேண்டும். செய்யாறு மேல்மா சிப்காட் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். இத்திட்டத்துக்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அவர்களிடமே திருப்பி வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காவிரி உரிமைமீட்புக் குழு சார்பில் தஞ்சாவூர் ரயிலடியில் நவ.30-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.

ஆலோசனைக் கூட்டத்தில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் பொருளாளர் த.மணி மொழியன், பொறுப்பாளர்கள் துரை.ரமேஷ், சாமி.கரிகாலன், சுந்தரவடிவேல், ச.சமியோன் சேவியர் ராஜ்,எம்.வைகறை, பழ.ராசேந்திரன், ரா.ஜெயக்குமார், திருவாரூர் கலைச் செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x