Published : 23 Nov 2023 04:00 AM
Last Updated : 23 Nov 2023 04:00 AM

தேன் கூட்டில் கல் எறிந்ததுபோல்... குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது: விஸ்வரூபம் எடுக்கும் விவசாயிகளின் போராட்டங்கள்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தில் 9 ஊராட்சிகளில் 3,174 ஏக்கர் விவசாய நிலத்தை, சிப்காட் தொழிற்பேட்டையின் 3-ம் கட்ட விரிவாக்கப் பணிக்கு கையகப்படுத்த தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 124 நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் பங்கேற்றனர்.

மேலும் அவர்கள், பேரணி மற்றும் மனு கொடுக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். சார் ஆட்சியர் அனாமிகா உள்ளிட்டோர் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. ஆட்சியரை சந்தித்து முறையிட வந்த விவசாயிகளை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் காவல் துறையினர் தடுத்து நிறுத்திவிட்டனர்.

தமிழக அரசை விமர்சித்து வந்த விவசாயிகள், ஆட்சியர் மற்றும் அமைச்சருக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தனர். இதனால், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை முடிவு செய்தது. இதன் எதிரொலியாக, கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்கை தூசி தட்டி எடுத்த அனக்காவூர் காவல் துறையினர், 20 விவசாயிகளை கைது செய்து, பல்வேறு சிறைகளில் அடைத்தனர்.

இதில், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் உட்பட 7 விவசாயி கள் மீது கடந்த 15-ம் தேதி குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கு, திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இதன் எதிரொலியாக, ஒருங்கிணைப்பாளர் அருள் நீங்கலாக, 6 விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 17-ம் தேதி இரவு உத்தரவிட்டுள்ளார்.

விவசாயிகள் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, “வெளியூரைச் சேர்ந்த அருள் என்பவர் விவசாயிகளை தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், வானத்தில் மற்றும் கடலில் தொழிற்சாலைகளை தொடங்க முடியாது” என்றார்.

மேலும் அவர், “குண்டர் சட்ட நடவடிக்கையை செய்தித்தாளில் படித்து (கடந்த 17-ம் தேதி) தெரிந்து கொண்டதாக” தெரிவித்தார் ( இதேபோல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொலைக் காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டதாக அப்போதைய முதல்வர் பழனிசாமி கூறியது நினைவு கூறத்தக்கது ).

குண்டர் சட்டத்தில் கைதான விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை சொகுசு காரில் அழைத்து வந்து செய்தியாளர்கள் முன்பு நிற்க வைத்தனர். அப்போது, குண்டர் சட்டத்தில் கைதான தேவனின் தந்தை உள்ளிட்டவர்கள், அருள் ஆறுமுகம் தூண்டுதலின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையில், அவர்கள் அனைவரும் தங்களது கருத்தை மாற்றிக் கொண்டுள்ளனர். காரில் செல்லும்போது, ஒரு சிலர் கேட்டுக்கொண்டதின் பேரில் கூறியதாக தெரிவிக் கின்றனர்.

அமைச்சர் கருத்துக்கு கண்டனம்: இந்நிலையில் நிலத்தை பாதுகாக்க போராடிய விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் மற்றும் கைது நடவடிக்கையை கண்டித்து விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்துள்ளன. அமைச்சர் எ.வ.வேலுவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள விவசாய சங்க நிர்வாகிகள், “வானத்திலும், கடலிலும் விவசாயம் செய்ய முடியாது, நிலத்தில்தான் விவசாயம் செய்ய முடியும்” எனக் கூறினர்.

மேலும், விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து, கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவித்துள்ளது. தொடர் போராட்டத்தில் ஈடுபட பல்வேறு விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. விவசாயிகள் மீதான நடவடிக்கையானது, தேன் கூட்டில் கல் எறிந்ததுபோல், குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x