Published : 23 Nov 2023 04:00 AM
Last Updated : 23 Nov 2023 04:00 AM

மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழகத்தில் ஏழை மக்களிடம் பணம் வசூலிக்கப்படுகிறது: மத்திய இணை அமைச்சர் குற்றச்சாட்டு

பகவந்த் குபா | கோப்புப் படம்

திருவண்ணாமலை: தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏழை மக்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்படுகிறது என மத்திய இணை அமைச்சர் பகவந்த் குபா குற்றஞ்சாட்டினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 நாட்களாக சுற்றுப் பயணம் செய்து வரும் அவர், திருவண்ணாமலையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும் போது, “பிரதமர் மோடி தலைமையிலான 10 ஆண்டு கால பாஜக அரசு, பழங்குடியினர் மற்றும் பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் தொழில் முனைவோர் உட்பட சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளன.

ஊழலற்ற அரசாங்கம் என்பதால், இந்திய நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. 2013 - 14-ம் நிதியாண்டில் 2.2 டிரில்லியன் என இருந்த நிலையில், தற்போது 4 டிரில்லியனாக உயர்ந்துள்ளது. பிரதமரின் துணிச்சலான முடிவு, இந்திய நாட்டின் வளர்ச்சி மீதான ஆர்வம்தான், இதற்கு காரணம், வறுமை கோட்டில் இருந்து கடந்த 5 ஆண்டுகளல் 13.5 கோடி குடும்பங்கள் மீண்டு வந்துள்ளனர். வேலை வாய்ப்பின்மை என்பது 3.2 சதவீதம் தான் உள்ளது. இது உலகளவில் ஒப்பிடுகையில் மிக குறைவு.

இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 2014-ல் 10-வது இடத்தில் இருந்தது. பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில், இந்தியாவின் பொருளாதாரம் உலகளவில் உயர்ந்துள்ளது. மோடி அரசின் நலத்திட்டங்கள் மூலம் 81 கோடி மக்கள் பயன் அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தலைப்பில் மோடி அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மோடி அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில், தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார். தமிழக அரசு அதிகாரிகளும் ஆர்வம் காட்டவில்லை, இது போன்ற செயல், ஏழை மக்களுக்கு எதிரானது. மோடி அரசின் திட்டங்களை முடக்குவதை தமிழக மக்கள் விரும்பவில்லை, பாராட்டவும் இல்லை. பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டம், ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டம் என்பது மோடி அரசின் சிறப்பான திட்டமாகும்.

தமிழக அரசுக்கு நல்லதல்ல: தமிழகத்தில், பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் ஒரு வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்க ஏழை மக்களிடம் ரூ.40 ஆயிரம் வசூலிக்கின்றனர். ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ் இணைப்பு கொடுக்க ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.2 ஆயிரம் வசூலிக்கின்றனர். இது தமிழக அரசுக்கு நல்லதல்ல.

சனாதன தர்மத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறை கூறி வருகிறார். சனாதனம் குறித்து அவர், முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மக்களை ஒருங்கிணைப்பது சனாதனம். திருவண்ணாமலை அருகே 13 சித்தர்களின் ஜீவ சமாதிகள் இடிக்கப்பட்டதற்கு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு பதிலளிக்க வேண்டும். தமிழகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர், திமுக ஊழியர்கள் போல் செயல்படுகின்றனர்.

அனைத்து அரசு அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் அரசு ஊழியர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. மக்களின் வரி பணத்தில் உங்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. திமுகவினர் பாக்கெட்டில் இருந்து ஊதியம் வழங்கவில்லை. இந்த நிலை தொடர்ந்தால், மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பார்கள்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x